வெள்ளை மாளிகையில் போதைப் பொருள் பயன்படுத்தினாரா எலான் மஸ்க்? - ஓபனாக ட்ரம்ப் சொன்ன பதில்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அரசு செயல்திறன் துறையில் எலான் மஸ்க் தலைமை ஆலோசகராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில், எலான் மஸ்க் அடிக்கடி போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஒழுங்கற்ற நடத்தை இருந்ததாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், ”எலான் மஸ்க் கேட்டமைன், எக்ஸ்டசி போதை வஸ்துக்கள் மற்றும் சைக்டெலிக் காளான்களை உட்கொண்டார். அது அவரின் அரசுப் பணி குறித்து கேள்விகளை தூண்டியது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி, கடந்த ஆண்டு ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியாக மாறியதால், எலான் மஸ்க் முன்பு அறியப்பட்டதைவிட மிகவும் தீவிரமாக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தனர். அவர் ஊக்கமருந்தான Adderall உட்பட சுமார் 20 மாத்திரைகளை வைத்திருந்த தினசரி மருந்துப் பெட்டியுடன் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். தவிர, “அடிக்கடி, சில நேரங்களில் தினமும் அவர் கேட்டமைன் எடுத்துக்கொண்டார். அது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுத்தது” எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எலான் மஸ்க் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “வெள்ளை மாளிகையில் சட்டவிரோதப் பொருட்களைப் பயன்படுத்துகிறாரா என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை, ஆனால், அவர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என நம்பிக்கை கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த தகவலை எலான் மஸ்க் மறுத்துள்ளார். அவர், “நான் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், போதை மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை. நியூயார்க் டைம்ஸ் பொய் சொல்லிக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்பு நான் 'மருந்து' கெட்டமைனை முயற்சித்தேன். அதையே எக்ஸ் தளத்தில் தெரிவித்தேன். எனவே இது செய்திகூட அல்ல. இது இருண்ட மன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவுகிறது. ஆனால், அதன் பிறகு நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார். எனினும், மஸ்க் முன்பு கெட்டமைனை எடுத்துக் கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். அது, எதிர்மறை மனநிலையைக் குணப்படுத்த தனக்கு அது பரிந்துரைக்கப்பட்டதாகவும், மருந்துகளைப் பயன்படுத்துவது தனது பணிக்கு பயனளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.