”நீங்கள் அழகாக உள்ளீர்கள்” இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் நீண்டகால பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான ஒரு வரைபடத்தை நிறுவுவதற்கும் ஒரு கட்டமைப்பை இறுதி செய்வதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும். இதில் இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ட்ரம்பிற்குப் பின்னால் மேடையில் கூடியிருந்த 30 தலைவர்களில் இத்தாலியத் தலைவர் மட்டுமே ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்கள் முன்னிலையில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பேசிய அதிபர் ட்ரம்ப், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை ’அழகான பெண்’ என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், ”இத்தாலியில், ஓர் இளம்பெண் இருக்கிறார். அவர் ஓர் அழகான இளம்பெண். இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்”எனத் தெரிவித்தார். பின்னர், ட்ரம்ப் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த புன்னகைத்த மெலோனியை நோக்கித் திரும்பி, “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? நீங்கள் இங்கு வந்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் அதைப் பாராட்டுகிறோம். அவர், இங்கே இருக்க விரும்பினார். இத்தாலியில், அவரை உண்மையிலேயே மதிக்கிறார்கள். அவர், மிகவும் வெற்றிகரமான அரசியல்வாதி" எனத் தெரிவித்தார்.
48 வயதான மெலோனி குறித்து 79 வயதான ட்ரம்ப் குறிப்பிட்டது சமூக வலைத்தளத்தில் எதிர்வினையை ஏற்படுத்தியது. “இது சர்வதேச அவமானம், இது மிகவும் அவமானகரமானது, ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஓர் உலக பெண் தலைவரின் பார்வையைப் பற்றிப் பேசுவது உங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தருமா, உலக அரங்கில் அமெரிக்காவை ட்ரம்ப் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.