புதுக்கட்சி தொடங்கிய எலான் மஸ்க்.. கலாய்த்து தள்ளும் டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க கட்சி என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கிய எலான் மஸ்க்கின் திட்டம் குறித்து காட்டமாகவே விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி என்ற இரு கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், என்னையும் பார் என்று கட்சி தொடங்கிய எலான் மஸ்க் குறித்து விரிவாக பேசி இருக்கிறார். கலாய்த்திருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்.
அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்போடு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அவரை எதிர்த்து தனிக்கட்சியை தொடங்கி இருக்கிறார் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப்பை ஆட்சியில் அமர்ந்த கோடிகோடியாக செலவழித்த மஸ்க், நிர்வாகத்திலும் உடன் பயணித்தார். இதற்கிடையே, ட்ரம்ப் கொண்டு வந்த one big beautiful bill என்ற வரி மற்றும் செலவு குறைப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஸ்க், அதன் நீட்சியாக கட்சியையே தொடங்கிவிட்டார். அமெரிக்க கட்சி என்பதுதான் கட்சிக்கு அவர் வைத்துள்ள பெயர். வீண் விரயம் மற்றும் ஊழலால் நாடு திவாலாகும்போது, ஒருகட்சி முறையில் வாழ்வது ஜனநாயகம் அல்ல என்று கூறிய எலான் மஸ்க், மக்களுக்கு சுதந்திரத்தை திருப்பி அளிப்பதற்காகவே கட்சியை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இதனை அபத்தமான முடிவாகவே பார்க்கிறேன். தேர்தலில் எங்கள் குடியரசுக் கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது. ஜனநாயக கட்சி தோற்றிருக்கிறது. எப்படியானாலும், இரு கட்சி முறையே இங்கு தொடர்ந்து வருகிறது. குழப்பத்தை உண்டாக்கவே மூன்றாவதாக ஒரு கட்சியை துவங்கியிருக்கிறார்கள். 3வது கட்சி எல்லாம் அமெரிக்க அரசியலில் எடுபட்டதே இல்லை.. அந்த கட்சியுடன் வேடிக்கையாக விளையாடலாம் என்று கூறியிருக்கிறார்.
அதோடு சமூகவலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்ட ட்ரம்ப், கடந்த 5 வாரங்களாக எலான் மஸ்க் தனது தடம் மாறி பயணித்து வருகிறார். 3ம் கட்சியாக வந்தவர்கள் எல்லாம் வென்றதில்லை. one big beautiful bill எனும் மசோதா உண்மையில் ஒரு சிறந்த மசோதாதான்.. ஆனால் அனைவரும் மின்சார கார்களை வாங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் திட்டத்திற்கு எதிராக அது இருக்கிறது. அவரது திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தேன்.. மக்கள் அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை வாங்கட்டும்.. அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எனது முதல் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.