இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நியமனம்.. யார் இந்த செர்ஜியோ கோர்?
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் அலுவலத்தில் பணியாற்றும் இயக்குநரான செர்ஜியோ கோரை நியமித்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு உறவுகளில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில், “இந்தியக் குடியரசிற்கான எங்கள் அடுத்த அமெரிக்கத் தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை பதவி உயர்வு பெறச் செய்வதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “செர்ஜியோ ஒரு சிறந்த நண்பர். அவர் பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். அவர் எனது வரலாற்று அதிபர் தேர்தல் பிரசாரங்களில் பணியாற்றினார். எனது சிறந்த புத்தகங்களை வெளியிட்டார். மேலும் எங்கள் இயக்கத்தை ஆதரித்த மிகப்பெரிய சூப்பர் பிஏசிகளில் ஒன்றை நடத்தினார்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
யார் இந்த செர்ஜியோ கோர்?
செர்ஜியோ கோர், 1986இல் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் பிறந்தவர். அந்த நேரத்தில், அது சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், அவர் சில ஆண்டுகள் மால்டாவிலும் கழித்தார். அதன்பிறகு, 2020ஆம் ஆண்டு ட்ரம்ப் வெற்றி நிதிக் குழுவின் தலைமைப் பணியாளராக இருந்தபோது, கோர் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அவர் MAGA Incஇன் மூத்த ஆலோசகராகவும் இருந்தார். மேலும் ட்ரம்பிற்கான ரைட் ஃபார் அமெரிக்கா - ஒரு அரசியல் நடவடிக்கைக் குழுவையும் வழிநடத்தினார். கோர், எலான் மஸ்க்குடன் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக செர்ஜியோ கோர் உள்ளார்.