மீண்டும் மீண்டுமா? நேபாளத்தைத் துரத்தும் பேரிடர்! நிலச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
இயற்கையின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய பேரழிவின் ரணங்களே இன்னும் நேபாளத்தில் மறையாத நிலையில், தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவுகளால் நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தப் பேரிடரில் பலர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் பேரழிவிலிருந்து நேபாள மக்கள் இன்னும் முழுமையாக மீண்டெழாத நிலையில், தற்போது மீண்டும் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காத்மாண்டுவிலிருந்து மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோர்கா மாவட்டத்தின் சும்னுப்ரி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகள், புதிகண்டகி ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஆற்றில் நீர் தேங்கியுள்ளது. பின்னர், தேங்கியிருந்த நீர் திடீரெனப் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மண் மற்றும் சகதியுடன் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பல வீடுகளும் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. மேலும், இரண்டு தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், நீர்மின் திட்டம் ஒன்றுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை உடனடியாக வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நேபாள ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பாதிப்புகளிலிருந்து நேபாளம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

