பனாமாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்.. தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை!
மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த 2 நிலநடுக்கங்கள் அந்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கத்தால், பசிபிக் பெருங்கடலை ஒட்டிய பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 6.6 என்ற ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பனாமா சிட்டி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டன. இதனால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பனாமாவின் தலைநகர் பனாமா சிட்டியிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டடங்கள் சேதமடைந்ததுடன், சில இடங்களில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தச்சூழலில் தான், , பனாமா மட்டுமின்றி கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பெரு, நிகரகுவா, குவாத்தமாலா, எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளின் சில பகுதிகளிலும் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. பனாமாவில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

