கடினமாகும் UK விசா கனவு., இனி இது இல்லன்னா கஷ்டம்... பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு.!
இந்தியா உட்பட விசா விண்ணப்பதாரர்களுக்கான கடுமையான புதிய ஆங்கில மொழித் தேர்வுத் தேவைகளை இங்கிலாந்து அரசு இன்று (அக்.15) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறது. இந்த தேர்வுகளை பொறுத்தவரை பிரிட்டனில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அளவிற்கு இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. என்ன விவரம் என பார்க்கலாம்.
தங்கள் நாட்டிற்குள் அதிகரித்து வரும் குடியேற்ற அளவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட விசா விண்ணப்பதாரர்களுக்கான புதிய முறையை கொண்டுவரபிரிட்டன் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் விசா விண்ணப்பதாரர்களுத்கான புதிய ஆங்கில மொழித் தேர்வுத் தேவைகளை இங்கிலாந்து அரசு செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது .
புதிய "Secure English Language Test" உள்துறை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படும். இதன் முடிவுகள் ஜனவரி 8, 2026 முதல் அனைத்து திறமையான தொழிலாளர்களுக்கும் அடுத்தடுத்த விசா விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக சரிபார்க்கப்படும். ஒரு விண்ணப்பதாரரின் ஆங்கிலம் பேசுதல், கேட்டல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றின் தரநிலை, நிலை B2 என குறிப்பிடப்படும். இது A-நிலை அல்லது வகுப்பு 12 க்கு சமமாக இருக்க வேண்டும், இது விண்ணப்பதாரர்கள் இங்கிலாந்தின் வாழ்க்கையில் சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும் என்பதை உறுதி செய்யும் என்று உள்துறை அலுவலகம் நம்புகிறது.
இந்த நாட்டிற்கு வந்து பங்களிப்பவர்களை இந்த நாடு எப்போதும் வரவேற்றுள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தோர் நமது மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இங்கு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி வருபவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியாது என்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறினார்.
அரசாங்கத் திட்டங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு graduate-level job-ஐ கண்டுபிடிப்பதற்கான நேரமும் தற்போதைய இரண்டு ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாகக் குறைக்கப்படும். ஜனவரி 1, 2027 முதல், பட்டதாரி மாணவர்கள் 18 மாதங்கள் மட்டுமே இங்கிலாந்தில் தங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.