கணிப்புகளை பொய்யாக்கிய தங்கம்.. திடீர் விலையேற்றத்துக்கு காரணம்.. அடுத்து விலை கூடுமா.. குறையுமா?
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சத்தைத் தொட்ட நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீர் சரிவைச் சந்தித்தது. அதாவது, சுமார் 3 நாட்களிலேயே ஒரு சவரன் 2,232 ரூபாய் வரை விலை குறைந்து சாமானியர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியது. பொதுவாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினால் அமெரிக்க டாலர் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபத்தைக் கொடுக்கும். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் சரியும். இதன் காரணமாக இந்த முறையும் தங்கத்தின் விலை குறையும் என்றே கணிப்புகள் வெளியாகின. ஆனால், அந்தக் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி சர்வதேச நிதி நிறுவனமான க்ரக்ஸ் இன்வெஸ்டர் (Crux Investor) அமைப்பு இந்த அசாதாரண நிகழ்வுக்கு காரணமான நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பதில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும், வட்டி உயர்வால் கடன் சுமை அதிகரிக்கும்போது, டாலரின் நீண்டகால மதிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், ஈரான் போரில் இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படாத நிலையில், முதலீட்டாளர்கள் இன்னும் தங்கத்தையே பாதுகாப்பான முதலீடாக கருதுவதால், அதில் முதலீடு அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு முன்னர் தங்கம் விலை குறைந்திருந்ததால் தங்கம் வாங்க இது வாய்ப்பு என பலரும் தங்கத்தில் முதலீடு செய்ததால் அதன் மதிப்பு திடீரென அதிகரித்துள்ளது என்றும் க்ரக்ஸ் இன்வெஸ்டர் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதோடு ஈரான், உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து உலகளாவிய பதற்றம் நீடிக்கும் நிலையில், அது முடிவடையும் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தே வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

