காஸாவில் பசிப்பிணியால் 193 பேர் உயிரிழப்பு: உணவுப் பற்றாக்குறை தீவிரம்!
இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து வசிப்பிடங்களை விட்டு வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து வரும் காஸா மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சிக்கல், உணவுப் பொருள்கள் கிட்டாமல் குழந்தைகள் மடியும் நிலை தொடர்கிறது. புதன் காலையோடு முடிவடைந்த 24 மணிநேரத்தில் உணவின்றி ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்துடன் பசிப்பிணியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 193ஆக அதிகரித்துள்ளது. இதில் 96 பேர் குழந்தைகள் என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.
உதவிப்பொருள்கள் அடங்கிய லாரிகள் காஸா பிராந்தியத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் விமானங்கள் மூலம் உணவுப் பொருள்கள் போடப்படுகின்றன. ஆனால், காஸா பிராந்தியத்தில் உள்ள மக்களின் பசிப்பிணியைப் போக்க இப்பொருள்கள் போதுமானதாக இல்லை என்கின்றன ஐக்கிய நாடுகள் அவையும், உதவிகளை வழங்கி வரும் தன்னார்வ அமைப்புகளும்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் இருதரப்பு மோதல் தொடங்குவதற்கு முன்புவரை காஸா பிராந்தியத்திற்குள் நாள்தோறும் 500 டிரக்குகளில் உதவிப்பொருள்கள் சென்றன. ஆனால், தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டபோது உணவுப் பொருள்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தத்தின் காரணமாக கடந்த ஜூலை 27இல் மீண்டும் உதவிப்பொருள்கள் காஸா பிராந்தியத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. அந்த வகையில் ஜூலை 27 தொடங்கி தற்போதுவரை 769டிரக்குகள் மட்டுமே காஸாவிற்குள் அனுதிக்கப்பட்டுள்ளன.
அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 84 டிரக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் கடல்போல் தேவைக்கு சிறு துளியைக் கொடுப்பது போல என்கின்றன சர்வதேச தொண்டு நிறுவனங்கள். மேலும் உணவு தேடிச் செல்வோர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, அமெரிக்கா, இஸ்ரேல் உதவியோடு காஸா பிராந்தியத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள உதவி வழங்கும் மையங்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் சில அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. எல்லா மக்களுக்கும் அடிப்படை தேவையான உணவு தடையின்றி காஸா மக்களுக்கு கிடைக்க வழியை உருவாக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமை.