பிறப்புசாா் குடியுரிமை ரத்து.. ட்ரம்ப்பின் உத்தரவிற்கு தடை! நீதிமன்றம் அதிரடி!
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற உடன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் திட்டத்தை ட்ரம்ப் ரத்து செய்தது, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
பிறப்புசார் குடியுரிமை ரத்து என அறிவித்த ட்ரம்ப்..
பெற்றோரின் நாடு, அவர்களின் குடியேற்றம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், குழந்தைகள் பிறந்த நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கானவழிவகை அமெரிக்காவில் இருந்து வருகிறது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அந்நாட்டின் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்தார்.
அதிபராக பதவியேற்ற பிறகு அவர் கையெழுத்திட்டுள்ள உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் குடியுரிமை பெற, அவர்களின் பெற்றோர் ஒருவராவது அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என இருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்களில் அமெரிக்கா சென்று வசித்து வரும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை என்பது கிடைக்காது. இந்த அறிவிப்பு அடுத்த 30 நாட்களை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் பிப்ரவரி 19, 2025 வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் குடியுரிமை கிடைக்கும்.
தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்..
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ட்ரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க சியாட்டில் நீதிமன்றம் ட்ரம்ப்பின் இந்த உத்தரவிற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு அரசியலமைப்பிற்கு எதிரானது. என் அனுபவத்தில் அரசியலமைப்பிற்கு எதிரான இப்படி ஒரு வழக்கை நான் பார்த்தது இல்லை” எனக்குறிப்பிட்டார். ட்ரம்ப்பின் உத்தரவு நீதிமன்றத்தின் தடையை தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.