இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட பிசிசிஐ மறுப்பு.. வெடித்த புதிய சர்ச்சை!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான சர்ச்சை மோதல் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
* முதலில் தொடர் நடத்தும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என பிசிசிஐ மறுப்பு தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு வந்து விளையாடியதை சுட்டிக்காட்டி பிசிசிஐ முடிவுக்கு செவி சாய்க்காமல் இருந்துவந்தது.
* பின்னர் பிசிசிஐ-ன் உறுதியான மறுப்பால் விரக்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், 2027 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்ற புதிய ஒப்பந்தத்தை போட்டதற்கு பிறகு ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி போட்டிகளானது துபாய் மற்றும் பாகிஸ்தான் என இரண்டு இடங்களில் நடத்தப்படவிருக்கிறது.
* இந்த பிரச்னை முடிந்தபிறகு பாகிஸ்தானில் நடக்கும் தொடக்க விழாவில் அனைத்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் பங்கேற்று புகைப்படம் எடுத்துக்கொள்ள, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் ரோகித் சர்மா பாகிஸ்தான் பயணப்படுவார் என தகவல் வெளியான நிலையில், தற்போது ரோகித் சர்மா செல்வதற்கும் பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
*இப்படி சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சை வெடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தற்போது இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயர் அச்சிடுவதற்கும் பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விதிமுறையை பொறுத்தவரையில் ஐசிசி தொடரை எந்த நாடு நடத்துகிறதோ, ஐசிசி கோப்பை லோகோவுடன் தொடரை நடத்தும் நாட்டின் பெயரும் அதில் இடம்பெறும். இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை நடத்தியபோது, ஒருநாள் உலகக் கோப்பை லோகோவுடன் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த லோகோ இருந்த ஜெர்ஸியைத்தான், பாகிஸ்தான் வீரர்களும் அணிந்து விளையாடினார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பெயரை ஜெர்சியில் அச்சிட பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் பெயரை அச்சிட பிசிசிஐ மறுப்பு..
ஐஏஎன்எஸ் உடன் பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர், இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அச்சிட மறுத்ததன் மூலம் பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலை கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலை கொண்டு வருகிறது, இது விளையாட்டிற்கு நல்லதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டனர். தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை அனுப்பவும் விரும்பவில்லை, இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் போட்டியை நடத்தும் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு ஐசிசி அனுமதிக்காது என்றும், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபியானது பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.