இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி.!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷாரூக் அர்ஜுமந்த் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இருவருக்கும், இரண்டு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409-ன் கீழ் (அரசு ஊழியராக இருந்து நம்பிக்கைத் துரோகம் செய்தல்) தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, இருவருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு 'தோஷகானா-2' என்று அழைக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு இம்ரான் கான் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இம்ரான்கான் மனைவி புஷ்ரா பீபிக்கு விலையுயர்ந்த 'பல்கேரி' வைர நகை செட் ஒன்றை பரிசாக வழங்கினார். இதில் நெக்லஸ், வளையல், மோதிரம் மற்றும் கம்மல் ஆகியவை இருந்தன. அரசு விதிகளின்படி, வெளிநாட்டுப் பயணங்களின் போது கிடைக்கும் விலையுயர்ந்த பரிசுகளை அரசு கருவூலமான 'தோஷகானா'வில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இந்த நகை செட்டை அவர்கள் முறையாக ஒப்படைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நகை செட்டின் உண்மையான மதிப்பு சுமார் 7.15 கோடி ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பீடு). ஆனால், ஒரு தனியார் நிறுவனம் மூலம் இதன் மதிப்பை வெறும் 58 லட்சம் ரூபாய் எனக் குறைத்துக் காட்டி, வெறும் 29 லட்சம் ரூபாய் மட்டும் அரசுக்குச் செலுத்தி அந்த நகைகளை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே, முதல் தோஷகானா வழக்கில் நீதிமன்றம் இவர்களை விடுவித்திருந்த நிலையில், தற்போது இந்த இரண்டாவது தோஷகானா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2024-ல் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வந்தது. இந்தத் தீர்ப்பு இம்ரான் கானின் அரசியல் எதிர்காலத்திற்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, ’இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டார்’ என்ற தகவல் பரவிய நிலையில், அதனை, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

