சூடான் | ராணுவத்தின் கோட்டையைக் கைப்பற்றிய RSF.. 1,500 பேர் கொன்று குவிப்பு.. ஐ.நா. கண்டனம்!
சூடானில், ராணுவத்தின் கடைசிக் கோட்டையை கைப்பற்றிய ஆர்.எஸ்.எஃப். என்ற துணை ராணுவப் படை, கடந்த 3 நாட்களில் 1,500 பேரைக் கொன்று குவித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வடஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சிக்கும் ஆர்.எஸ்.எஃப். எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ஆம் ஆண்டு முதல் நிலவும் சண்டையில், அரேபியர் அல்லாதவர்கள் அதிகம் வசிக்கும் டார்ஃபூர் மாகாணத்தில் உள்ள, ராணுவத்தின் கோட்டையான அல்ஃபஷார் நகரை, 17 மாத முற்றுகைக்குப் பிறகு, துணை ராணுவம் கைப்பற்றியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் நாட்டின் ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கும் ‘ஹெமெட்டி’ என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஃப் தளபதி முகமது ஹம்தான் டகாலோவிற்கும் இடையே உள்நாட்டு மோதல் வெடிக்கத் தொடங்கியது.
2000களின் டார்பூர் இனப்படுகொலையின்போது பிரபலமான ஜன்ஜாவீட் போராளிக் குழுக்களிலிருந்து உருவான RSF, இப்போது டார்பூர் மற்றும் கோர்டோஃபான் உள்ளிட்ட மேற்கு சூடானைக் கட்டுப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சி, தற்போது எல்-ஃபாஷர் நகரின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல், கடுமையான பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது தப்பியோட முயன்ற பொதுமக்களை RSF கொன்று குவித்ததாகக் கூறப்படுகிறது. அது, கடந்த 3 நாட்களில் 1,500 பேரைக் கொன்று குவித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், SAFஆறாவது பிரிவு தலைமையகம் மற்றும் 157வது பீரங்கி படையணி உட்பட எல்-ஃபாஷர் நகரின் முக்கிய இராணுவ தளங்களை RSF கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 27 அன்று பயன்படுத்தப்பட்ட RSF வாகனங்கள் மற்றும் T-55 டாங்கிகளைக் காட்டும் யேல் HRL செயற்கைக்கோள் படங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலால், அங்கு கடந்த 48 மணி நேரத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி, RSF கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஐ.நா. இருதரப்பினரையும் போர்க் குற்றங்களுக்காகக் குற்றம்சாட்டியுள்ளது. RSF நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று அமெரிக்கா கருதுகிறது, இது 2003ஆம் ஆண்டு லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற டார்பர் நிகழ்வை எதிரொலிக்கிறது.
அப்போது, டார்பரில் 1,50,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 12 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தும் இருந்தனர். இது உலகின் மிகப்பெரிய இடம்பெயர்வு நெருக்கடியாக இருக்கிறது. மேலும் 25 மில்லியன் பேர் பஞ்சம் போன்ற நிலைமைகளை எதிர்கொள்கின்றனர், இது காஸாவைவிட மோசமானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான், எல்-ஃபாஷர் நகரில், தற்போது நடைபெற்ற தாக்குதல் காரணமாக 26,000 பேரை இடம்பெயரச் செய்துள்ளது. ஆர்.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்சாம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு தெற்கேயும், தாவிலாவை நோக்கி மேற்கேயும் குழுக்கள் தப்பிச் செல்வதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கானோரை கொள்ளை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. RSF-இன் குற்றங்களுக்கு எரிபொருளாக இருப்பது சூடானில் இருக்கும் தங்கம் என்று கூறப்படுகிறது. இது ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. டார்பரில் உள்ள இந்தச் சுரங்கங்களை RSF கட்டுப்படுத்துவதுடன், UAE-க்கு உற்பத்தியை கடத்துகிறது. அதன்மூலம், ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு மில்லியன் கணக்கான பணத்தை ஈட்டுகிறது. ஆனால், RSF-க்கு ஆயுதம் வழங்குவதை UAE மறுக்கிறது. லிபியாவின் கலீஃபா ஹஃப்தார் உள்ளிட்ட பிற ஆதரவாளர்கள் உள்ளனர். அதேநேரத்தில், SAF எகிப்து, துருக்கி மற்றும் ஈரானில் இருந்து உதவி பெறுகிறது.

