‘எல்லா பெண்களும் என்னை விரும்புகிறார்கள்’ - விசித்திர காதல் நோய்.. பாதிப்புக்குள்ளான சீன இளைஞர்!
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. 20 வயதான இந்த இளைஞர், அங்குள்ள பல்கலைக்கழத்தில் படித்து வருகிறார். இவர், தன்னை மிகவும் அழகான நபர் என நினைத்துக் கொள்வதுடன், அங்குள்ள பெண்கள் அனைவருமே தன்னை விரும்புவதாகக் கருதியுள்ளார்.
காலம் செல்லசெல்ல அவரது இந்த எண்ணம், அடுத்தகட்டத்துக்கு அவரை கொண்டுசென்றுள்ளது. அதாவது, இந்த செயல்பாடுகள் அவருக்கு ஒரு விசித்திரமான காதல் நோயை அவருக்குள் உருவாக்கி உள்ளது. இதையறியாமலேயே சமீபத்தில் மாணவி ஒருவரிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார் அவர். ஆனால், அவரோ காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். எனினும், லியு அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காரணம், அந்தப் பெண் தம்மிடம் வெட்கப்படுவதாகவே நினைத்துக்கொண்டு அமைதியாகச் சென்றுள்ளார். பின்னர்தான் அவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதை அறிந்து உளவியல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாக லியு நினைப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவரது இந்த விசித்திர நோய் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது, பணத்தை வீண் விரயம் செய்வது உள்ளிட்ட பிரச்னைகளை அவர் சந்தித்து வருவதும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.