கொசு அளவில் புது ட்ரோன்
கொசு அளவில் புது ட்ரோன்முகநூல்

கொசு அளவில் புது ட்ரோன்.. சீனா கையில் எடுத்த ஐடியா.. விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

மிகச்சிறிய அளவிலான இந்த ட்ரோனின் பயன்பாடு என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்று பார்க்கலாம்.
Published on

தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டமாக கொசு சைஸில் சிறிய ட்ரோனை உருவாக்கி வியக்க வைத்துள்ளனர் சீன விஞ்ஞானிகள். உலகின் எங்காவது ஒரு மூளையும் போர் தொடர்ந்து வரும் நிலையில், மிகச்சிறிய அளவிலான இந்த ட்ரோனின் பயன்பாடு என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்று பார்க்கலாம்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் மிகச்சிறிய அளவிலான ட்ரோனை உருவாக்கி பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளனர். 0.6 செண்டிமீட்டரே உயரம் கொண்ட இந்த ட்ரோன் கண்களுக்கே எளிதில் புலப்படாது. மஞ்சள் நிறத்தில் இரு இறக்கைகள், சிறிய உடல்பகுதி மற்றும் மூன்று கம்பிகளால் ஆன கால்களை கொண்டுள்ள இது, கண்காணிப்பு மற்றும் பயோ வார் உள்ளிட்ட சூழல்களில் பயன்படும் வகையில் இருக்கிறது.

குறிப்பாக, போர்க்களத்தில் உளவு பார்ப்பதற்கு சிறந்த திட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது. இருநாடுகளுக்கிடையே போர் மூளும் சூழலில், வான்வழி தாக்குதல்கள் பெரும்பாலும் ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்படும். ஆனால், இதுபோன்ற கொசு அளவில் இருக்கும் ட்ரோன்கள், ரேடார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உளவு பார்க்கும் தன்மை கொண்டவையாக இருகின்றன. எளிதில் கண்ணுக்கு தெரியாத இந்த ட்ரோனை வைத்துக்கொண்டு அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கேட்டால், அங்குதான் ட்விஸ்டே இருக்கிறது.

நட்டுல வச்சேன்னு பாத்தியா தாஸ்.. லட்டுல வச்சேன் என்ற பாணியில், இந்த ட்ரோனில் தகவல் தொடர்பு, சென்சார் மற்றும் பவர் யூனிட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலே போதும் இந்த ட்ரோன்களை இயக்க முடியும். பேரிடர் காலங்களில் கண்காணிப்பு.. தகவல் சேகரிப்புக்கு இந்த ட்ரோன்கள் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டாலும், பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

கொசு அளவில் புது ட்ரோன்
தண்ணீர் பாட்டிலே 20,000 ரூபாயா? வியக்க வைக்கும் விண்வெளி விவகாரம்.. அடுக்கும் விஞ்ஞானி!

ஆம், இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் முக்கியமான பாஸ்வொர்டுகள் மற்றும் அதிமுக்கிய தரவுகளை திருட வாய்ப்புள்ளது என்றும், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். எனினும், கண்காணிப்போடு நிறுத்திக்கொள்ளாமல், பேரிடர் கால மீட்புப்பணி, விவசாயம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு இவற்றை பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நான் ஈ பட பாணியில் இந்த வகை ட்ரோன்கள் போர் களத்திற்கு வரும் பட்சத்தில், எதிரி நாடுகள் அதனை எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கத்தியே இல்லாமல் சண்டை செய்வதுபோல, பெரிய பெரிய ஆயுதங்களைத் தாண்டி மினி ட்ரோனை வைத்து பல காரியங்களை சாதிக்க முடியும் என்பதால், சீனாவின் அடுத்தடுத்த நகர்வை பலரும் உற்றுநோக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com