200 கி.மீ வேகம்.. பறக்கும் ஏர் டாக்சி.. அசத்திய நிறுவனங்கள்!!
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில், மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் 'ஆட்டோஃப்ளைட் ப்ராஸ்பெரிட்டி' என்ற மின்சார ஏர் டாக்சியின் முதல் பொது சோதனைப் பறப்பு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த சோதனையை கஜகஸ்தானின் அலடாவ் அட்வான்ஸ் ஏர் குரூப் (Alatau Advance Air Group) நிறுவனமும், சீனாவின் ஆட்டோஃப்ளைட் (AutoFlight) நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இந்த முதல் பொது சோதனைப் பறப்பு பயணிகள் இல்லாமல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஏர் டாக்சி, eVTOL எனப்படும் செங்குத்தாக புறப்பட்டு, செங்குத்தாகவே தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதில் ஒரு விமானி மற்றும் ஐந்து பயணிகள் வரை பயணிக்க முடியும். மணிக்கு 200 கிலோமீட்டர் வேகம், ஒரே சார்ஜில் சுமார் 200 கிலோமீட்டர் தூரம் பறக்கும் திறன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். மேலும், 13 மின்மோட்டார்கள் மூலம் இயங்குவதால், சாதாரண ஹெலிகாப்டர்களை விட குறைந்த சத்தம் மற்றும் நேரடி கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு இல்லாத சுற்றுச்சூழல் நட்பு வாகனமாக இது கருதப்படுகிறது.
கஜகஸ்தான் அரசு ஏற்கனவே ஏர் டாக்சிகளுக்கான சட்டப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் நகரங்களுக்கு இடையேயான பயணங்கள், அவசர மருத்துவ சேவைகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வான்வழிப் போக்குவரத்தின் புதிய அத்தியாயமாக பார்க்கப்படும் இந்த ஏர் டாக்சி, எதிர்கால நகரப் போக்குவரத்தை முற்றிலும் மாற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

