\
The Psychology Behind Morning Phone Checking
Mobile AddictionX

காலையில் எழுந்த உடனே MOBILE PHONE - ஐ தேடுவது ஏன்? உளவியல் சொல்லும் சுவாரசியமான விளக்கம்!!

காலையில் கண் விழித்ததும் MOBILE - ஐ தேடும் பழக்கம் வெறும் MOBILE ADDICTION மட்டுமல்ல. அதன் பின்னால் மூளையின் செயல்பாடு மற்றும் உளவியல் காரணங்களும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Published on

காலையில் எழுந்த உடனே மொபைல் போனை பார்ப்பவரா நீங்கள்? இதனால் உங்களை மொபைல் அடிக்க்ஷன் என்று குறை சொன்னால் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு உளவியல் வேறு சுவாரசியமான காரணத்தை சொல்கிறது.

காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்பாகவே நம்முடைய கைகள் தானாகவே மொபைலைத் தேடுகின்றன. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஈமெயில் என ஒருமுறை பார்த்த பிறகுதான் பலரின் நாள் தொடங்குகிறது.

இதுபோன்ற பழக்கத்தைப் பார்த்து, "மொபைலுக்கு அடிமையாகிவிட்டார்கள்" என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உளவியல் நிபுணர்கள் இதற்கு வேறொரு விளக்கத்தையும் கூறுகிறார்கள்.

Mobile Addiction
Mobile AddictionX

மொபைல் அடிமைத்தனமா? உளவியல் சொல்லும் விளக்கம்

அவர்கள் கூறுவதன்படி, காலையில் போனை எடுக்கும் பழக்கம் எல்லா நேரத்திலும் அடிமைத்தனத்தால் மட்டும் வருவதில்லை. நம் மூளை இயங்கும் விதமும், இரவு முழுவதும் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற இயல்பான ஆர்வமும்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

நாம் இரவில் தூங்கிக்கொண்டிருந்தாலும், உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கலாம். புதிய செய்திகள் வந்திருக்கலாம். அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கலாம். அல்லது அடுத்த நாள் திட்டங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். காலையில் கண் விழித்த உடன் புதிதாக என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் மூளைக்கு அதிகமாக இருக்கிறது. உளவியலில் இதை "Uncertainty Reduction" என்று அழைக்கிறார்கள். அதாவது, நிச்சயமற்ற தன்மையை குறைக்க தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பழக்கம் தான் இது.

'Variable Reward' உளவியல் என்ன சொல்கிறது?

இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தினமும் போனைத் திறந்தவுடன் பெரிய செய்தி கிடைப்பதில்லை. சில நாட்களில் முக்கியமான மெசேஜ் இருக்கும். சில நாட்களில் நல்ல செய்தி ஒன்று காத்திருக்கும். சில நேரங்களில் எதுவுமே இருக்காது. ஆனாலும், இன்று ஏதாவது புதுசாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை நம்முடைய மூளை ஒருபோதும் விடுவதில்லை. இதைத்தான் உளவியலாளர்கள் 'Variable Reward' என்று சொல்கிறார்கள். எப்போது பரிசு கிடைக்கும் என்று தெரியாததால், அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்ய நம் மூளை நம்மையே தூண்டுகிறது. சமூக வலைதளங்கள் இதே உளவியலைப் பயன்படுத்தித்தான் கோடிக்கணக்கான மக்களை தினமும் தங்களிடம் திரும்ப வரவைக்கின்றன.

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்pt web

உலகத்துடன் மீண்டும் இணைவதற்கான முயற்சியா?

இதோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. பல மணி நேரம் தூங்கிய பிறகு, நாம் தற்காலிகமாக வெளி உலகத்திலிருந்து விலகியிருப்போம். அதனால், காலையில் போனை எடுப்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. "இப்போது மணி என்ன?" "வெளி உலகில் என்ன நடக்கிறது?" "யாராவது என்னைத் தொடர்பு கொண்டிருக்கிறார்களா?" "இன்று என்னென்ன வேலைகள் இருக்கின்றன?" என்று அந்த நாளை மனதளவில் புரிந்துகொண்டு, மீண்டும் உலகத்துடன் இணைவதற்கான ஒரு முயற்சியாகவும் அது இருக்கலாம். அதனால்தான், பலருக்கு போனைப் பார்த்த பிறகுதான் அந்த நாள் உண்மையாகத் தொடங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

காலையில் மொபைல் பார்ப்பது நல்லதா? கெட்டதா?

அப்படியானால், காலையில் எழுந்த உடனே போனை எடுப்பது நல்லதா... கெட்டதா...? இதற்கு உளவியலில் நேரடியாக "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதில் இல்லை.

ஒரு நிமிடம் போனைப் பார்த்துவிட்டு உங்கள் அன்றாட வேலையைத் தொடங்கினால், அது பலருக்கு இயல்பான பழக்கமாக இருக்கலாம்.

ஆனால், அந்த ஒரு நிமிடம் 30 நிமிடமாக... ஒரு மணி நேரமாக... முடிவில்லாத ஸ்க்ரோலிங்காக மாறிவிட்டால், அதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், அது உங்கள் நேரத்தையும், கவனத்தையும், மனநிலையையும், வேலைத்திறனையும் மெதுவாக பாதிக்கத் தொடங்கலாம்.

எனவே, இனிமேல் யாராவது உங்களைப் பார்த்து "காலையிலேயே போன்ல மூழ்கிட்டியே!" என்று சொன்னால், உடனே உங்களை மொபைல் அடிமை என்று நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவேளை, உங்கள் மூளை உலகத்துடன் மீண்டும் இணைவதற்காக இயல்பாகவே முயற்சி செய்து கொண்டிருக்கலாம். ஆனால், அந்த முயற்சி ஒரு நிமிடத்தில் முடிவடைய வேண்டுமா? அல்லது ஒரு மணி நேரமாக நீள வேண்டுமா? என்பதை முடிவு செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

The Psychology Behind Morning Phone Checking
35 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு ஏன் அடிவயிற்றுக் கொழுப்பு அதிகரிக்கிறது? காரணம் இந்த ஹார்மோனா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com