"அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்'' - வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்புக்கு சீனா பதிலடி!
செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். சீனாவுக்கான வரி விதிப்பானது, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான 25 சதவிகித வரி விதிப்புடன் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாக, சீன பொருள்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்த 10 சதவிகித வரியுடன் கூடுதலாக 10 சதவிகித வரியையும் டிரம்ப் அறிவித்தார். சீனாவில் தயாரிக்கப்படும் போதை மருந்துகள் கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதால் சீனாவுக்கு கூடுதல் வரி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஃபெண்டனில் விவகாரம் ஒரு அற்பமான சாக்கு என்று சீனா கடுமையாக தெரிவித்துள்ளது. ஃபெண்டனில் என்பது வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தாகும். மேலும் ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்கான எதிர் நடவடிக்கையாக அமெரிக்க பொருள்களுக்கும் வரி விதிப்பை அதிரடியாக அறிவித்துள்ளது சீனா.
அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் சோயாபீன்ஸ், சோளம், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், கடல் உணவுகள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி முதலான பொருள்களுக்கு 10 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம், பருத்தி, கோழி, கோதுமைக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுவதாகவும், இந்த புதிய வரி விதிப்பு வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் சீனா அறிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் 25 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. உலக வர்த்தகப் போர் அபாயத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு தொடுத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும், இறுதி வரையில் சீனா போராடும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.