கணித வகுப்புகளுக்கு இணையாக மாறும் PT பீரியட்.. முதன்மை பாடமாக மாற்றும் சீனா! காரணம் என்ன?
2019-ம் ஆண்டு கோவிட் லாக்டவுன் உத்தரவிற்கு பிறகு, நாடு முழுவதும் உடல் பருமன் என்பது சிறுவர்களிடையே பெரிய பிரச்னையாக மாறியுள்ளதாக சீன அரசு கவலையடைந்துள்ளது. அதிகளவு நொறுக்கு தீணிகள் உட்பட வீட்டிலிருந்தே வீடியோகேம் விளையாட்டுக்கள் மற்றும் ஆன்லைன் ஆர்டர் உணவு என பல்வேறு வாழ்க்கைமுறை மாற்றங்கள் உடல்பருமன் பிரச்னையை பெரிதாக்கியுள்ளன.
இந்நிலையில் அடுத்த 10-12 ஆண்டுகளில் உடல்பருமன் என்பது தீவிர பிரச்னையாக மாறும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் உடல் செயல்பாடுகளை கட்டாயமாக்கும் வகையில், ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் 2 மணி நேரம் கட்டாயம் உடற்கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்ற அறிவிப்பை சீன அரசு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 மணிநேரம் உடற்கல்வி கட்டாயம்..
2035ஆம் ஆண்டிற்குள் "வலுவான கல்வி தேசத்தை" உருவாக்கும் வகையில், சீனா தனது முதல் தேசிய திட்டத்தை ஜனவரியில் வெளியிட்ட பிறகு இந்த நடவடிக்கைகள் வந்துள்ளதாக சீனா செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி குழந்தைகளிடையே உருவாகிவரும் உடல்பருமன் என்ற பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு இரண்டு மணிநேரம் கட்டாயம் உடற்கல்வி என்பதையும், இதனை பள்ளிகளும் முக்கியமானதாக கருதி முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக கணிதம், மொழி பாடங்களுடன், உடற்கல்வி பாடத்தையும் முதன்மை பாடமாக மாற்றும் அறிவிப்பை சீனாவின் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
மேலும் கால்பந்து, கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போன்ற முக்கிய விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தகவலின் படி பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு ஆசியர்களுக்கான பற்றாக்குறை 1,20,000ஆக இருக்கும் நிலையில், அதனை உடனடியாக நிரப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.