”முதலில் அவளைக் காப்பாற்றுங்கள்” - வெள்ளத்தில் சிக்கிய மனைவி.. அந்த நேரத்திலும் கணவர் காட்டிய அன்பு!
அன்பு விலை மதிப்பில்லாதது; அது, எத்தகைய ஆபத்திலும் கைகொடுக்கக் கூடியது. அதிலும் கணவன் மனைவி கொண்டிருக்கும் அன்பு என்பது சாதாரணமானது அல்ல. அப்படியான ஒரு சம்பவம்தான் சீனாவில் அரங்கேறியுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்கூட, சீனாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உள்ளூர்க் கடையில் இருந்த 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள செய்தி வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெய்ஜிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு தம்பதியினர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக மீட்புப் படையினர் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் அந்தப் பெண்ணின் கணவர் உடனே சுயநலமின்றி, ”முதலில் எனது மனைவியை காப்பாற்றுங்கள். அவளுக்கு நீந்தத் தெரியாது. எனக்கு நீச்சல் தெரியும்” என அவர்களிடம் கூறினார். மேலும், அவரை, அவர்களை நோக்கித் தள்ளியுள்ளார். அப்போது வலுவான நீரோட்டம் அவரை இழுத்துச் சென்றது. ஆயினும், அவரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். என்றாலும் மீட்புப் படையினர் அவரையும் சேர்த்தே காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பயனர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பயனர் ஒருவர், "முக்கியமான தருணங்கள் மனித இயல்பை ஆய்வுக்கு உட்படுத்துகின்றன. சகோதரி, நீங்கள் ஒரு நல்ல கணவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "நான் மீண்டும் காதலில் நம்பிக்கை கொண்டுள்ளேன்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த தம்பதியரின் கணவரான லியு, “அந்த நேரத்தில், நாங்கள் மிகவும் பயந்தோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டதிலிருந்து நாங்கள் சந்தித்த மிகவும் ஆபத்தான சூழ்நிலை இது. என் மனைவி நீச்சல் தெரியாததால் அழுதாள். ஓர் ஆணாக, என் மனதில் தோன்றிய முதல் விஷயம், முதலில் என் மனைவியைக் காப்பாற்றுவதுதான். எங்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.