சீனா | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள்! கடை உரிமையாளர் பரிதாபம்!
சீனாவில் பெய்துவரும் கனமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். பகுதிவாசிகளின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டு வருகின்றனர். மறுபுறம், தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கருதி 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். தவிர, முழங்கால் அளவு நீரில் நடந்துசென்று மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்கின்றனர். பல இடங்களில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பெருஞ்சிரமத்தை சந்திக்கின்றனர். தங்கள் வாழ்நாளில் இப்படியொரு மழையை சந்தித்ததில்லை என பெய்ஜிங் புறநகரில் வசிக்கும் சில முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவின் உள்ள ஒரு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உள்ளூர்க் கடையில் இருந்த 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தி ஸ்டாண்டர்டில் வெளியான ஒரு செய்தியின்படி, ஷான்சி மாகாணத்தின் வுகி கவுண்டியில் உள்ள லாவோஃபெங்சியாங்கில் யே என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 25ஆம் தேதி, அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது ஊழியர்களுடன் கடையில் இருந்தபோதே, வெள்ளம் அவரது கடையைச் சூழ்ந்துள்ளது. அப்போது அந்த நகைக்கடையில் அலமாரிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை, உடனடியாக லாக்கரில் எடுத்து வைக்க முடியவில்லை. இதனால், அவரது கடையின் அலமாரியில் இருந்த 20 கிலோகிராம் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ஜேட் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி அறிந்ததும், உள்ளூர்வாசிகள் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது அந்த நகைகளை எடுக்கக் களத்தில் குதித்தனர். அதில் சிலர் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடியதாக நகைக்கடை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறுபுறம், இதன்மூலம், ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை இழந்ததாக நகைக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், நகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நகைக்கடை குடும்பத்தினருக்கு வெறும் 1 கிலோகிராம் நகைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.