\
gold
goldANI

தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா.. இந்தியாவுக்கு வரப்போகும் ஆபத்து?

சீனாவின் தங்க வேட்டை: இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வரப்போகும் சவால்கள்!
Published on: 
Summary

சீனா தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்து தன் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியாவின் தங்க இறக்குமதிச் செலவு அதிகரித்து, வர்த்தகப் பற்றாக்குறை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது.

செய்தியாளர் - M.மீரா

உலக நாடுகள் பலவும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், சீனா அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு சீனாவின் தங்க இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்குப் பின்னால் பொருளாதார ரீதியான முக்கிய காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான சீனா, வெளிநாடுகளுக்கு ஏராளமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் அந்நாட்டுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. இதனால், சீனாவின் ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதிச் செலவுக்கும் இடையிலான வித்தியாசம் தொடர்ந்து (வர்த்தக உபரி) அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், சீனா தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026-ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவின் தங்க இறக்குமதி மதிப்பு 209 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது அந்நாட்டின் மொத்த இறக்குமதியில் சுமார் 8 சதவீதமாகும்.

கடந்த 24 மாதங்களாகத் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வரும் சீனா, இந்தக் காலகட்டத்தில் மட்டும் சுமார் 171 டன் தங்கத்தைத் தனது இருப்பில் கூடுதலாகச் சேர்த்துள்ளது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 129 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்வதால், சீனாவின் மொத்த இறக்குமதிச் செலவு அதிகரிக்கிறது. இதன் மூலம் ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதிச் செலவுக்கும் இடையிலான வித்தியாசம் குறைகிறது. அதாவது, சீனாவின் வர்த்தகத்தில் ஏற்படும் அதிகப்படியான ஏற்றுமதி வருமானத்தைக் கட்டுப்படுத்த தங்க இறக்குமதி ஒரு காரணியாக அமைந்துள்ளது.

gold
gold reuters

இவ்வாறு ஒருபுறம் தங்கத்தை வாங்கிக் குவிப்பதன் மூலம் தனது தங்க இருப்பையும் அதிகரித்துக் கொள்ளும் சீனா, மறுபுறம் தனது ஏற்றுமதி – இறக்குமதி இடையிலான வித்தியாசத்தையும் குறைத்து வருகிறது. இதனால், சீனாவின் தங்க வேட்டை உலகப் பொருளாதாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், சீனா தொடர்ந்து அதிக அளவில் தங்கத்தை வாங்கினால், சர்வதேசச் சந்தையில் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை உயர அழுத்தம் ஏற்படலாம்.

ஏற்கெனவே தங்க இறக்குமதிக்காக இந்தியா அதிக அளவில் டாலர்களைச் செலவிட்டு வரும் நிலையில், சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்தால் இறக்குமதிச் செலவும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்தியாவில் நகை வாங்கும் பொதுமக்களும் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

Gold Prices Crash! Will They Fall Below ₹1 Lakh?
GOLDREUTERS

உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களது தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் உலகச் சந்தையில் தங்கத்துக்கான போட்டி அதிகரிக்கிறது.

மற்றொரு புறம், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சியிலும் சில நாடுகள் தங்கத்தை முக்கிய முதலீடாகப் பார்க்கின்றன. இதனால் சர்வதேச நிதிச் சந்தையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இருப்பினும், சீனாவின் தங்க இறக்குமதி மட்டுமே தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள், போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகளும் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கின்றன.

gold
தங்கம் விலை அபார வீழ்ச்சி! தங்க வியாபாரிகள் அதிர்ச்சி! MCX-ல் அதிரடி மாற்றம்!