தங்கம் விலை அபார வீழ்ச்சி! தங்க வியாபாரிகள் அதிர்ச்சி! MCX-ல் அதிரடி மாற்றம்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
பங்கு சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது போல், MCX எனப்படும் தளத்தில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க முடியும். குறிப்பாக, தங்கம், வெள்ளி வாங்குதவதற்கான மிகமுக்கியமான இடமாக இது பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை, பெரிய அளவிலான தங்க வியாபாரிகள் வாங்கி, நகையாக மாற்றி, பொதுமக்களிடம் விற்பனை செய்கிறார்கள். MCX-ல் Spot Price மற்றும் Future Price என்ற இரு முறைகளில், தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. Spot Price என்றால், அந்த நாளில் என்ன விலையோ அதைக் கொடுத்து தங்கம் வாங்கப்படுகிறது.
ஆனால், Future Price என்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேவைப்படும் தங்கத்தை, முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வாங்குவார்கள். அந்த ஒப்பந்தத்தில் தங்கத்தின் விலையையும் முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்வார்கள். எதிர்காலத்தில், தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படும். இந்த நடைமுறையின் படி தான், பெரும்பாலான வணிகர்கள் தங்கத்தை MCX-ல் வாங்கி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில், எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.
அதாவது, டிசம்பர் மாத Future Price அடிப்படையில், 10 கிராம் தங்கத்தின் விலையானது, 1 லட்சத்து 27 ஆயிரத்து 452 ரூபாயில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 561-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிட்டதட்ட 3.84 சதவீதம் அளவுக்கு, தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு, தங்கம் எட்டியுள்ள மிகக் குறைந்த அளவாக இது பார்க்கப்படுகிறது. Spot Price அடிப்படையில், தங்கத்தின் விலை 2.7 சதவீதம் அளவுக்கு குறைந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 525 அமெரிக்கா டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் மட்டும், சுமார் 9.2 சதவீதம் சரிந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை, டிசம்பர் மாத Future Price அடிப்படையில், ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 482 ரூபாயில் இருந்து 1 லட்சத்து 48 ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டதட்ட 5.99 சதவீதம் அளவுக்கு, இந்த சரிவு அமைந்திருக்கிறது. தங்கம், வெள்ளி ஆகிய இரு உலோகங்களும், இவ்வாறு விலை வீழ்ச்சி அடைந்திருப்பது, தங்க வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர் வலுப்பெறுதல், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் உயர்வது போன்ற காரணங்களால் தான், தங்கத்தின் விலை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

