மொழி தெரியாமல் ‘ஐ லவ் யூ’ என்று சொன்ன சீன நபர்.. அமெரிக்கப் பெண்ணுடன் நடந்தேறிய திருமணம்!
மொழி தெரியாமல் 'ஐ லவ் யூ' என்று தவறுதலாகச் சொன்ன சீன நபர், அமெரிக்கப் பெண்ணுடன் காதலாகி, 5 மாதங்களில் திருமணத்தில் முடிந்தது. இந்த காதல் கதை இணையத்தில் வைரலாகி, 'சிறந்த காதல் திட்டமிட்டு நடைபெறுவதில்லை' என்பதற்கான உதாரணமாக பேசப்படுகிறது.
மொழி தெரியாமல், தவறுதலாக ‘ஐ லவ் யூ’ சொன்ன நபர்!
காதலர் ஒருவர், தன் காதலியிடம் ‘ஐ லவ் யூ சொல்வது’ இயல்பு.. ஆனால், அதே வார்த்தையை யாரோ ஒருவர் முகம் தெரியாத பெண்ணிடம் சொல்லும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் கொஞ்சநஞ்சமல்ல. எனினும், ஒருவேளை அந்த நபர் அக்காதலை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அனைத்தும் சரியாகிவிடும். அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிரச்னைதான். ஆனால், சீனாவில் இதேபோன்று சம்பவம் நடந்தது. ஆனால், அங்கு நடந்த விஷயமே வேறு. மொழி தெரியாமல், தவறுதலாக ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை பெண் ஒருவரிடம் ஆண் நபர் தெரிவிக்க, அதுவே அவர்களுக்குள் காதல் உருவாகி கல்யாணத்தில் முடிந்திருப்பதுதான் சுவரஸ்யம்.
அமெரிக்காவின் அலபாமா பகுதியை சேர்ந்தவர், ஹன்னா ஹாரீஸ். மழலையர் பள்ளி ஆசிரியையான இவர், ஆங்கிலம் கற்பிப்பதற்காக சீனாவின் ஷென்யாங் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது ஒருநாள் அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருந்தார். அதை டெலிவரி செய்ய 27 வயதான லியு என்பவர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். இருவரும் முதல்முறையாகச் சந்தித்தபோது லியு ஆங்கிலத்தில் பேச முயன்றார். அப்போது அவர், 'ஹலோ ஐ லவ் யூ' என்று தவறுதலாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஹாரீஸ் சிரித்துள்ளார். பின்பு, “எனக்கு ஆங்கிலம் அதிகம் பேச வராது. அதனால் நான், 'ஹலோ, ஐ லவ் யூ' எனத் தெரியாமல் சொல்லிவிட்டேன்” லியு தெளிவுபடுத்தியுள்ளார்.
5 மாதத்தில் திருமணத்தில் முடிந்த காதல்
அவரின் செயலில் உண்மை இருப்பதையறிந்த ஹாரீஸ், அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார். இந்தச் செயல் அவர்களிடம் ஆழமான நட்பை வளர்த்ததுடன், இருவரும் மொழியைப் பரிமாறிக் கொள்ள உதவியது. அதேநேரத்தில், அவர்களின் உறவையும் மேலும் ஆழப்படுத்தியது. இருவரும் தொடர்ந்து பேசியபோது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது. அது, அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. தற்போது அவர்களுக்குள் மொழிப் பிரச்னை இருந்தாலும், காதல் அதைத் தகர்த்தெறிந்துள்ளது.
ஆம், அந்தக் காதல், அடுத்த 5 மாதங்களில் திருமணத்திலும் முடிந்தது. ஹன்னாவின் பெற்றோர் அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். லியு, ஹன்னாவை சீனா முழுவதும் அழைத்துச் சென்று அவருடைய கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறார். ஓர் எழுத்தாளராக வேண்டும் என்பது ஹாரீஸின் கனவாக உள்ளது. அந்த ஆதரவை லியு அவருக்கு முழுமையாக வழங்கி வருகிறார். அவர்களுடைய காதல் கதைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ’சிறந்த காதல்கள் திட்டமிட்டு நடைபெறுவதில்லை’ என்பதற்கு லியு - ஹாரீஸின் காதலும் ஓர் உதாரணமாக உலகம் முழுவதும் பேசத் தொடங்கியிருக்கிறது.