நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு: திடீர் வெள்ளத்துக்கு காரணம் என்ன? வெளியான நேபாள அமைச்சரின் அறிக்கை!
நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கு ராசுவா மாவட்டத்தில் போதே கோஷி (Bhote Koshi) ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் காலை திடீரென வழக்கத்தை விட பல மடங்கு அதிக அளவிலான வெள்ளம் பாய்ந்து வந்தது. தனது முன்னிருக்கும் பாலங்கள், சாலைகள், வீடுகள், கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஒன்று விடாமல் அடித்து கொண்டு பாய்ந்த இந்த வெள்ளம் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெருவெள்ளத்தில் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால் பல நூறு பேர் பாதிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வெள்ளத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த தகவலை நேபாள வெளியுரத்துத்துறை அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திபெத் பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் காரணமாகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது என்றும், இந்நிலச்சரிவின் மண் மற்றும் பாறைகள் ஆற்றுப் பாதையை அடைத்ததால், தேங்கிய நீர் திடீரென உடைப்பெடுத்து வெள்ளமாக மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது .
அதே நேரம் பல்வேறு ஆய்வாளர்களும் இமயமலையின் உயர்மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறை ஏரிகளில் ஏதேனும் ஒன்று உடைந்து அதன் காரணமாக பெருமளவில் நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே இந்த திடீர் வெள்ளம் வந்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த நிலச்சரிவு காரணமாக லெண்டே (Lhende) ஆற்றின் நீர் ஓட்டம் அடைக்கப்பட்டு, பின்னடைவாகத் தேங்கிய நீர் ஒரே அடியாக வெளியேறியதால் லெண்டே ஆறு கலக்கும் 'போடே கோஷி' (Bhote Koshi) ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

