பிஃபா உலகக் கோப்பை 2026.. இந்திய ரசிகர்களுக்கு கனடா ஷாக்.. 70% அதிகமான விசா விண்ணப்பம் நிராகரிப்பு!
கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் பிஃபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்த மாபெரும் தொடரில், நாளுக்கு நாள் பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகளும், எதிர்பாராத திருப்பங்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில், கனடா நாட்டின் டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் மட்டும் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண கனடா செல்ல விசா விண்ணப்பித்த இந்திய ரசிகர்கள் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத்துறையின் (IRCC) தரவுகளின் படி, கால்பந்து உலகக்கோப்பையைக் காண கனடா அரசிடம் விசா விண்ணப்பித்த இந்தியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்தியாவில் இருந்து விண்ணப்பித்த 1,225 பேரில் வெறும் 355 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 நவம்பர் 15 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், பிஃபா உலகக்கோப்பை போட்டிகளை பார்வையிடுவதற்காக உலகம் முழுவதும் இருந்து கனடாவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் விசா விண்ணப்பங்களில், 41 சதவீத விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமான CTV நியூஸ் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில், 1,225 விண்ணப்பங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. எனினும், அதில் வெறும் 355 விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டதால், இந்தியர்களின் விசா ஒப்புதல் விகிதம் சுமார் 29 சதவீதமாக பதிவாகியுள்ளது.
1,725 விண்ணப்பங்களுடன் கானா முதலிடத்தில் இருந்த நிலையில், அந்த நாட்டின் விண்ணப்பங்களில் 11 சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 1,630 விண்ணப்பங்களுடன் கொலம்பியா இரண்டாவது இடத்திலும், 1,250 விண்ணப்பங்களுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பை போட்டிகளை காண கனடாவுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், விசா பரிசீலனையில் அந்நாட்டு அரசு கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதாக இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

