அமெரிக்கா சொல்வதை ஏற்கமாட்டோம்.. அதிரடியாக பேசிய கனடா.. அதிர்ந்துபோன ட்ரம்ப்!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடடிக்கைகளை எடுத்து வருகிறார். தொடக்கத்தில் கனடா அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக மாறவேண்டும் என்றும், அதற்காக நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு கனடா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை எனக் கூறி கனடா மீது கூடுதல் வரிகளை விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டார். இது இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
கனடா தனது ஏற்றுமதியில் சுமார் 75 சதவீதத்தை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யும் நிலையில், இந்த வரி விதிப்புகள் கனடாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது. தொடர்ந்து ஈரான் ஓர் ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால், அந்நாட்டின் மீது 50 சதவீதம் வரி விதிப்பேன் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை இறுதி ஒப்பந்தம் ஏதும் ஏற்படாததால் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா இன்றுமுதல் 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) அமெரிக்கா கனடாவிற்கு சிறந்த நிபந்தனைகளை வழங்கியிருந்தது, ஆனால் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றும், இதன் காரணமாகவே கனடா மீது இந்த கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம், அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் கடைசி நிமிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை. அமெரிக்கா சொல்வதை எல்லாம் எங்களால் கேட்க முடியாது என்றும் அமெரிக்காவின் நிபந்தனைகள் எங்களுக்கு பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவை நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்காவில் ட்ரம்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ள நிலையில், கனடா மீதான இந்த வரிவிதிப்பு ட்ரம்பின் செல்வாக்கை மேலும் குறைக்கும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக ட்ரம்ப் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

