“அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்” - களத்தில் இறங்கிய கனடா ஒன்றாரியோ மாகாண முதல்வர்!
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றுள்ளார். முன்னதாக, குடியேற்றக் கொள்கை, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு என பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும் குறிப்பாக, “கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும்” என அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா சென்று ட்ரம்புவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போதும் அவரிடம், “கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம்” என ட்ரூடோவிடம் ட்ரம்ப் கூறினார். ஆனாலும் ட்ரம்ப், தொடர்ந்து கனடா - அமெரிக்கா எல்லை குறித்த வரைபடத்தைப் பகிர்ந்து மீண்டும் பிரச்னையைத் தூண்டினார். இதற்கு ட்ரூடோவும் பதிலளித்திருந்தார். இந்த நிலையில், ”அமெரிக்கா கனடா மீது வரி விதித்தால் அதற்குப் பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை” என கனடா நாட்டு ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்த வரிவிதிப்பு நடைமுறை, கொண்டு வரப்பட்டால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்தே, அதற்குப் பிறகு கனடா செயலாற்றும். ட்ரம்பின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும். யாரோ ஒருவர் நமது தலையில் சுத்தியலால் கனமாக அடிப்பதை ஏற்க முடியாது. அதேநேரத்தில், கனடாவும் அமெரிக்காவும் செயலில் கூட்டாளிகளை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்கப் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தேவையான முக்கியமான கனிமங்கள் கனடாவிடம் உள்ளது. ஒருவேளை, அமெரிக்கா கனடாவில் இருந்து பெறவில்லை என்றால், சீனாவில் இருந்து பெறும். அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக மற்றும் கட்டணப் போர், சீனா மற்றும் அதன் ஆதரவு நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அவர் எத்தகைய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கவில்லை. எனினும் மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.