வரி விளம்பர விவகாரம் | டொனால்டு ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்!
கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனி அந்த நாட்டுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், கனடாவை அமெரிக்காவோடு இணைப்பது குறித்து அவ்வபோது பேசி வந்த அவர், கனடாவிற்கு அதிக வரிவிதிப்பையும் அமல்படுத்தி உள்ளார். இதற்கிடையே, கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரானார். மார்க் கார்னி பிரதமரான பின்பும் அமெரிக்காவை எதிர்த்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்காவிற்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கனடாவின் வரிவிதிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.1987ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆற்றிய ஓர் உரையில், ”வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்” என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது. இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி ட்ரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார். தொடர்ந்து, கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த விளம்பரத்துக்காக அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். தென் கொரியாவில் ஆசியா பசுபிக் மாநாட்டிற்கு இடையே தென் கொரிய அதிபர் அளித்த விருந்தின்போது ட்ரம்ப்பிடம் தனிப்பட்ட முறையில் மார்க் கார்னி மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர், “கனடா பிரதமர் என்ற முறையில், அமெரிக்காவுடன் நல்லுறவை பேணுவது என் பொறுப்பு. இதனால், நான் அதிபர் ட்ரம்பிடம் மன்னிப்பு கோரினேன். மேலும், ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டிடம் விளம்பரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்ததை ட்ரம்பிடம் தெரிவித்தேன். அவர் இந்த விளம்பரம் குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார். மார்க் கார்னி, தன்னிடம் மன்னிப்பு கேட்டதையும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப், “எனக்கு [கார்னியுடன்] நல்ல உறவு இருக்கிறது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் அவர்கள் செய்தது தவறு. அவர் மிகவும் நல்லவர். விளம்பரத்தில் அவர்கள் செய்ததற்கு அவர் மன்னிப்பு கேட்டார்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இருதரப்பிலும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்காது எனத் தெரிவித்துள்ளார்.

