“கனடா இந்தியாவை முதுகில் குத்திவிட்டது” - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா காட்டம்!
உலகில் நட்பான ஜனநாயக நாடாக அறியப்படும் கனடா, இந்தியாவை முதுகில் குத்திவிட்டதாக இந்தியா திரும்பப் பெற்ற கனடாவுக்கான தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சஞ்சய் வர்மா, “பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்காததே அவர்களை ஊக்குவிப்பதற்கு இணையானதுதான்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயத்திற்காக காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான காலிஸ்தான் ஆதரவாளர்கள் அந்த கொள்கையை ஒரு குற்ற சாம்ராஜியமாக மாற்றி உள்ளனர். கோல்டி பிரார், லாரன்ஸ் பிஸ்னாய் ஆகியோர் பெயர்களை இந்தியா, கனடா அதிகாரிகளிடம் தெரிவித்தது.
கோல்டி பிரார் பெயரை தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்த கனடா, பின்னர் திடீரென பெயரை நீக்கிவிட்டது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டது தவறு. முழுமையான விசாரணையின் மூலம் உண்மை வெளியே வரவேண்டும். இந்தியா எதையும் திரைமறைவில் செய்யவில்லை. இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரத்தையும் கனடா காட்டவில்லை” எனக் கூறினார்.