மீண்டும் குப்பை பலூன்கள்.. ஆனால் உள்ளே இருந்தது? | தென்கொரியாவை நூதன முறையில் பழிவாங்கிய வடகொரியா!
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்துவரும் எல்லைப் பிரச்னையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கையாக, இருகொரியாவையும் இணைக்கும் முயற்சியை கைவிட வடகொரியா அரசு அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்ததுடன், தென்கொரியாவை முதல்முறையாக ஓர் எதிரி நாடு என்று குறிப்பிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தென்கொரியாவுடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாகத் துண்டித்துள்ளது. இதன்படி வடகொரியாவில் இருந்து தென்கொரியா செல்லும் சாலை, ரயில்வே வழித்தடங்களை தனது ராணுவத்தின் மூலம் வெடிவைத்து தகர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தென்கொரியாவிற்குள் பலூன்கள் மூலம் கழிவுகள், குப்பைகளை அனுப்பிவந்த வடகொரியா தற்போது மேலும் ஒருபடி மேலாகச் சென்று நூதன முறையில் பழிவாங்கியுள்ளது. சியோல் நகருக்கு பலூன் மூலம் குப்பைகளை அனுப்பிய வடகொரியா, அதனுள் தென்கொரியா அரசுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளது. சியோல் நகரின் பல தெருக்களில் பரவிக்கிடந்த துண்டுப் பிரசுரங்களில், தென்கொரிய அதிபர் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களும், அவர்களுக்கு எதிரான கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், அவர்களது ஆட்சியில் மக்கள் கடுமையாக சிரமமடைவதாகவும் அந்த துண்டுப் பிரசுரங்களில் வாசகங்கள் இருந்தன. இதற்கிடையில் தென்கொரிய அதிபர் மாளிகைக்குள் வடகொரியா அனுப்பிய துண்டுப் பிரசுரங்கள் பறந்து வந்த காட்சிகள் வெளியாகிவுள்ளன.
முன்னதாக, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிகரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய பலூன்களை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா ஒலிபெருக்கி மூலம் வடகொரியா எல்லையில் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதன் விளைவாக, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான் இந்தப் பலூன்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வடகொரியா கூறியிருந்தது.