உடைந்த பூந்தொட்டி.. ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போன அதிசயம்!
செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் பாழடைந்த நிலையில் பூந்தொட்டி இருந்தது. முற்றிலும் உடைந்த பிறகும் அதை ஒட்டியபின் அலங்காரமாக வைத்திருந்தார் வீட்டின் உரிமையாளர். அவர் இறந்த பிறகு, பேரக் குழந்தைகள் பூந்தொட்டியை மீட்டு ஏலத்துக்கு அணுகியபோதுதான் இதுகுறித்த சுவாரஸ்யமான விவரம் வெளியானது. உலகப் புகழ்பெற்ற கலைஞர் ஹான்ஸ் கோப்பர் உருவாக்கிய இந்த பூந்தொட்டி 1964ஆம் ஆண்டின் அரிய கலைப் பொருளாக இருப்பது கண்டறியப்பட்டது. 4 அடி உயரமான செராமிக் தொட்டி, முதலில் வெறும் பூந்தொட்டி எனக் கருதப்பட்டது. ஆனால் ஹான்ஸ் கோப்பரின் கையொப்பம் அடையாளம் காணப்பட்டதும் அரிதானதாக மாறியது. முதலில் 10ஆயிரம் யூரோ வரை மதிப்பிடப்பட்டது. ஆனால் ஏலத்தில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பலர் போட்டியிட்டனர்.
இறுதியில் அமெரிக்காவில் இருந்து ஒருவர் இந்திய மதிப்பில் 56 லட்சம் ரூபாய் கொடுத்து பூந்தொட்டியை வாங்கினார். இதனை சீரமைக்க ஒன்பது லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹான்ஸ் கோப்பர் 1939இல் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தார். 1964இல் லண்டனின் கேம்பர்வெல் கலைப்பள்ளியில் கற்பித்தபோது இந்த தொட்டியை அவர் உருவாக்கினார். ஹான்ஸ் கோப்பர் படைப்புகள், நியூயார்க்கின் மெட்ரோபொலிடன் அருங்காட்சியகம் மற்றும் லண்டனின் விக்டோரியா, ஆல்பர்ட் அருங்காட்சியகம் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களில் காணப்படுகின்றன. ஒரு பழைய பாழடைந்த பொருளும், அதன் பின்னணி மற்றும் கலைமதிப்பால் எப்படி ஒரு பெரும் செல்வாக்கான கலையாக்கமாக மாற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!