”ஹரியானாவில் 22 முறை வாக்களித்த நபர்..” ராகுலின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் மாடல் எதிர்வினை!
ஹரியானா வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு பிரேசில் மாடல் பதிலளித்துள்ளார்.
வாக்குத் திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அந்த வகையில், 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்ததாக ராகுல் காந்தி நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். அப்போது பேசிய அவர், “சீமா, ஸ்வீட்டி மற்றும் சரஸ்வதி, ரஷ்மி, வில்மா போன்ற வெவ்வேறு பெயர்களில் 22 முறை வாக்களித்ததாகக் கூறப்படும் பிரேசிலிய மாடலிங் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, யார் அந்த பிரேசிலிய மாடலிங் பெண் என்கிற தேடுதல் வேட்டையும் இணையத்தைச் சூடேற்றியது. இதற்கிடையே, ராகுல் காட்டிய அந்தப் புகைப்படத்தில் உள்ள பிரேசிலிய மாடல் மற்றும் செல்வாக்குமிக்கவர் லாரிசா என அடையாளம் காணப்பட்டார். ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டப்பட்ட அந்தப் புகைப்படம் இந்திய வாக்காளருடையது அல்ல என்று சுட்டிக்காட்டி, உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர் சமூக ஊடகங்களில் வீடியோவைப் பகிர்ந்தார்.
இந்த நிலையில், இந்திய அரசியல் விவாதங்களில் தனது படம் பரப்பப்படுவதைக் கண்டுபிடித்த பிரேசிலிய மாடல் லாரிசா, தற்போது அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். ஆன்லைனில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், போர்த்துகீசிய மொழியில் இருக்கும் பேசியிருக்கும் லாரிசா, “நண்பர்களே, இந்த மக்கள் கிசுகிசுக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள்; அந்த புகைப்படத்தில் எனக்கு 18 அல்லது 20 வயது இருக்கும். மக்களை ஏமாற்ற என்னை இந்தியனாக சித்தரிக்கிறார்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது? நாம் எந்த உலகில் வாழ்கிறோம்” என அதில் பேசியுள்ளார்.
தொடர்ந்து இதுதொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் அரசியலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனது புகைப்படம் ஒரு ஸ்டாக் இமேஜ் தளத்திலிருந்து வாங்கப்பட்டு, எனது ஈடுபாடு இல்லாமல் பயன்படுத்தப்பட்டது. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அது நான் அல்ல, அது எனது புகைப்படம் மட்டுமே. நான் இந்தியாவுக்கு ஒருபோதும் சென்றதில்லை. நான் ஒரு பிரேசிலிய டிஜிட்டல் செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் ஒரு சிகையலங்கார நிபுணர். நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். இந்தியர்களின் கருணையையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். உங்கள் மொழி எனக்குத் தெரியாது, ஆனால் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்திய பத்திரிகையாளர்கள் சிலர், என்னைத் தேடி நேர்காணல்களை விரும்புகிறார்கள். நான் 'மர்மமான பிரேசிலிய மாடல்' என்று கூறி பதிலளித்தேன். ஆனால் நான் ஒரு மாடல்கூட இல்லை. எனக்கு 'நமஸ்தே' மட்டுமே தெரியும். எனக்கு வேறு வார்த்தைகள் தெரியாது. ஆனால் நான் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். எனது அடுத்த வீடியோவில் அவற்றைப் பயன்படுத்துவேன். விரைவில், நான் இந்தியாவில் பிரபலமடைவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

