\
Brazil Election: Trump Critic Lula Wins Fourth Term as President
லூலாReuters

ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த வெற்றி! பிரேசில் தேர்தலில் தலைகீழ் முடிவு.. மிரளவிட்ட 80 வயது லூலா

தென் அமெரிக்க நாடான பிரேசில் அதிபர் தேர்தலில், ட்ரம்ப் எதிர்ப்பாளரான ஒருவர் வெற்றி வாகை சூடியிருப்பது உலகளவில் கவனம் பெற்றிருக்கிறது.. யார் அவர்?.. பார்க்கலாம்..
Published on: 

பிரேசில் ஒன்றும் யாருடைய கொல்லைப்புறமும் அல்ல என ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தவர் லூலா. ட்ரம்பை ஒத்த வயதுகொண்ட 80 வயதான லூலா, நடந்துமுடிந்த அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்று வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார். சொல்லப்போனால், தென் அமெரிக்க கண்டத்தில் மீண்டும் இடதுசாரி கொள்கையை நிலைநாட்டியிருக்கிறார்.

 லூலா
லூலாReuters

1945-ல் பிறந்த லூலா, தொழிற்சங்கங்களில் அடிப்படை உறுப்பினராக பணியாற்றத் தொடங்கி, அதன் தலைவராக உருவெடுத்து, அந்நாட்டின் தொழிலாளர் கட்சியை தோற்றுவிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். 90-களில் தொடர்ச்சியாக உழைத்த லூலா, பிரேசில் அதிபர் தேர்தலில் 2003-ல் முதன்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து 2006-லும் வெற்றியை தன்வசமாக்கினார். அதிபரானப் பின் இவர் செயல்படுத்திய திட்டங்கள் அந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களை பயனடையச் செய்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இவர் செயல்படுத்திய வறுமை ஒழிப்புத் திட்டங்களால் பெரும்பாலான மக்கள் வறுமை நிலையிலிருந்து மீண்டதாக தெரிகிறது.

இந்தச் சூழலில், ஊழல் வழக்கில் சிறை சென்ற லூலா, 2018 அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் இவர் மீதான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 2023-ல் மீண்டும் பிரேசில் அதிபரானார். தற்போது நடந்துமுடிந்த முதல் சுற்று வாக்கெடுப்பில் வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சனாராவை விட குறைந்த வாக்குகளே பெற்றிருந்தார். அவரே அதிபரும் ஆவார் என பேசப்பட்டு வந்த சூழலில், கணிப்புகளை பொய்யாக்கி, இரண்டாம் கட்ட தேர்தலில் 51.79% வாக்குகளைப் பெற்று அதிபர் இருக்கையை தன்வசமாக்கியிருக்கிறார். இந்த அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு அதிகம் இருப்பதாக தொடர் புகார்களை சொல்லி வந்தார் லூலா. குறிப்பாக, அதிபர் ட்ரம்ப் தலையீட்டை கண்டித்து, “பிரேசிலின் ஜனநாயகம் பிரேசில் மக்களுக்கானது” என காட்டம் தெரிவித்திருந்தார்.

வெனிசுலா நாட்டைப் போல, பிரேசிலை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர ட்ரம்ப் துடிக்கிறார் என்ற பேச்சுகளும் அடிபட ஆரம்பித்தன. இந்தச் சூழலில், ட்ரம்புக்கு எதிராக தொடர்ந்து பேசி, அவரது கொள்கைகளை எதிர்த்து செயல்பட்டுவந்த லூலா வெற்றிபெற்றிருப்பது கவனம் ஈர்த்து வருகிறது.

Brazil Election: Trump Critic Lula Wins Fourth Term as President
இஸ்ரேல் பொதுத்தேர்தல்.. நாடு திரும்பும் வெளிநாடு வாழ் வாக்காளர்கள்.. நெதன்யாகு வெற்றி கேள்விக்குறி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com