”ஒரே மாதத்தில் 105 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்” - பலூச் ராணுவம் அதிர்ச்சி அறிக்கை!!
ஆப்கானிஸ்தான்-ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிராந்தியமான பலுசிஸ்தான், பாகிஸ்தானுடைய நிலப்பரப்பில் 44% அளவுக்கு விரிந்திருக்கிறது. ஆனால், பாலைவனம்சூழ் நிலமான பலுசிஸ்தானில் மக்கள் செறிவு குறைவு; ஆகையால், பாகிஸ்தானின் 25 கோடி மக்களில் 1.5 கோடி மட்டுமே கொண்ட பலுசிஸ்தானின் குரலுக்கான மதிப்பு குறைவாக உள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அரசு தங்கள் வளங்களை சுரண்டும்போது, தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பலூச் மாகாண மக்கள் கருதுகின்றன.
இந்தச்சூழலில் தான், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. அந்தப் போராட்டத்தின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாக பலூச் விடுதலைப் படை எனப்படும் BLA ஆயுதக் குழு இருந்து வருகிறது. எனினும், BLA-வின் கோரிக்கைகளை பாகிஸ்தான் ஒடுக்கும் நோக்கில், செயல்பட்டுவருகிறது. இந்தச்சூழலில் தான், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பலூச் விடுதலைப் படை இடையே தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதிலும், சமீபகாலமாக தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது.
இந்தச்சூழலில் தான், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அந்த பலூசிஸ்தான் மாகாணம் முழுவதும் 94 தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 105 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் BLA எனப்படும் பலூச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது. இதுகுறித்தான அறிக்கையில், பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வாகனங்கள், பாதுகாப்பு சோதனைச் சாவடிகள், ராணுவ முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக BLA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதாக BLA தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களிலும் பல்வேறு தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றது. செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை மட்டும் 28 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இதில் 52 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் BLA கூறியிருந்தது. அதேபோல், செப்டம்பர் 7 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட்ட 13 நடவடிக்கைகளில் 43 பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தச்சூழலில் தான், பலூசிஸ்தானில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. எனினும், BLA வெளியிட்டுள்ள 94 தாக்குதல்கள் மற்றும் 105 பேர் உயிரிழப்பு தொடர்பான முழுமையான எண்ணிக்கைகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

