மாணவர் அமைப்பின் தலைவர் மரணம்.. மீண்டும் வெடித்த வன்முறை.. பதற்றத்தில் வங்கதேசம்!
வங்கதேசத்தில் 'இன்குலாப் மஞ்சா' என்ற மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷரீப் உஸ்மான் ஹாடி காலமானதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இது, வன்முறையாக மாறியது. இதையடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் அடுத்த ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, கடந்த வாரம் டாக்காவில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி, உள்ளூர் மருத்துவமனைக்குப் பிறகு சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 நாள்கள் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று மரணமடைந்தார். இதையடுத்து, வங்கதேசத்தின் பல்வேறு இடங்களில் மாணவ இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
கட்டடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணிநேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.இதேபோல் சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுக்கு எதிராகவும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பூர்வீக இல்லதிற்கும் தீவைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் இடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
இன்னொரு புறம், இன்கிலாப் மஞ்சா செய்தித் தொடர்பாளர் ஒஸ்மான் ஹாடியின் ஆதரவாளர்கள், டாக்கா பல்கலைக்கழக மத்திய மாணவர் சங்கம் (DUCSU) மற்றும் பிற DU-வை தளமாகக் கொண்ட மாணவர் குழுக்களுடன் சேர்ந்து, அவரது கொலைக்கு நீதி கோரி ஷாபாக்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, உயிரிழந்த ஷெரீப் ஒஸ்மான் ஹாடியின் மரண உடல் வெள்ளிக்கிழமை மாலை வங்காளதேசத்திற்கு கொண்டு வரப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், உஸ்மான் ஹாடியின் மரணம் மற்றும் நாடு முழுவதும் பரவியுள்ள வன்முறையைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்ய இன்று பிற்பகல் டாக்காவில் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். வன்முறையைக் கைவிடவும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், வங்கதேச காவல்துறையினர் உஸ்மான் ஹாடியைச் சுட்டவரைத் தேடி வருகின்றனர், இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, தகவல் அளிப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் டாக்கா (சுமார் $42,000) வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

