மேற்கு வங்க துர்கா பூஜை.. வங்கதேசத்திலிருந்து வந்த ஹில்சா மீன்கள்.. சிறப்பு என்ன?
நவராத்திரி பண்டிகை சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் வங்கதேசத்திலிருந்து ஹில்சா மீன்கள் மேற்கு வங்காளம் வந்து சேர்ந்துள்ளன.
துர்கா பூஜையில் ஹில்சா மீன்கள் ஏன்?
மேற்கு வங்கத்தின் பெரும் பண்டிகை என்றால், அது துர்கா பூஜைதான். ’நவராத்திரி’ என அழைக்கப்படும் இந்தப் பண்டிகை சமயத்தில் தொடர்ந்து 10 நாள்கள், ஆட்டம் பாட்டம் என மாநிலமே கோலாகலமாக இருக்கும். இந்தக் கொண்டாட்டத்தின்போது ஹில்சா மீன் உணவு முக்கிய அங்கம் வகிக்கிறது. துர்கை வழிபாடு, வீதி உலா என்ற பாரம்பரியத்துடன் ஹில்சா மீனையும் சேர்த்தாக வேண்டும். குறிப்பாக, துர்கா பூஜையின்போது மீன்கள், இறைச்சி உணவைப் படையில் இடுவதும் அதை உண்பதும் வங்காளிகளின் கலாசாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக, துர்கா பூஜையின் இறுதி நாளான விஜயதசமியின்போது மீன் படையலிட்டு கடவுளை வழியனுப்பி வைப்பதும், அப்போதுதான் அந்த மீன் அடுத்தாண்டும் கிடைக்கும் என்பதும் வங்காளிகளின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த ஹில்சா மீன்களைப் பற்றிப் பேசுவது அலாதியானது. மென்மையான இறைச்சிக்குப் பிரபலமான இவற்றை, ஆங்கிலத்தில் The ilish (ஐலிஷ்) மீன்கள் என்று சொல்வதுண்டு. ’மீன்களின் ராணி’ என்றும் இதைச் சொல்வார்கள். வங்கதேசத்திலும், இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் வசிக்கும் வங்காளிகளின் பாரம்பரிய உணவு என்றால் அது, ஹில்சா மீன்கள்தான். மேலும், வங்காளிகளின் திருமண விழாக்களில் பரிமாறப்படும் விருந்து, ஹில்சா மீன் வகையின்றி நிறைவு பெறாது. வங்காளிகளின் புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் ஹில்சா மீன் உணவு இடம்பெறத் தவறாது. வங்கதேசத்திலும் மேற்கு வங்க மாநிலத்திலும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, இந்த வகை மீன்களைச் சமைத்து உண்பது மரபு. அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மக்களுக்கும், ஹில்சா மீன் விருப்ப உணவாகப் பார்க்கப்படுகிறது.
ஹில்சா மீன்களை அனுப்பும் வங்கதேசம்
இவை, வங்கதேசத்தில் உள்ள பத்மா உள்ளிட்ட ஆறுகளிலும், அந்நாட்டை ஒட்டிய வங்காள விரிகுடா கடலிலும், ஹில்சா வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. கங்கை நதியிலும் ஹில்சா மீன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், தங்கள் நாட்டில் தாராளமாகக் கிடைக்கும் ஹில்சா மீன்களை, தனது தொப்புள் கொடி உறவான மேற்கு வங்கத்துக்குப் பரிசாக வழங்குகிறது வங்கதேச அரசு. மேற்கு வங்க முதல்வருக்கு, துர்கா பூஜை பரிசாக பிரத்யேகமாக ஹில்சா மீன்கள் வந்து சேரும். இது உணர்வுப்பூர்மான ஓர் அணுகுமுறையாக இன்றளவும் பின்பற்றப்படுகிறது. அன்பின் பிணைப்பு, பாரம்பரியம் மற்றும் மதச்சடங்கின் உயிர்மூச்சு என்றும் இதைச் சொல்லலாம். 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்கு முன்பு, மேற்கு வங்கமும் வங்கதேசமும் ஒன்றாகத்தான் இருந்தது.
தற்போது வேறுவேறாக இருந்தாலும், வங்காளிகளின் மொழியும் கலாசாரமும் ஒன்றுதான். அந்த வகையில், இந்த ஆண்டு, நட்புறவின் அடையாளமாக 1,200 டன் ஹில்சா மீன்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்ப வங்கதேச அரசு முடிவு செய்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக தடைகள் இருந்தாலும் ஹில்சா மீன்களை மட்டும் குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.
வங்கதேச வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
இதுதொடர்பாக வங்கதேச வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ’அடுத்த வார இறுதியில் தொடங்கும் துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது 1,200 டன் ஹில்சா இந்தியாவிற்கு (முக்கியமாக மேற்கு வங்கம்) ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இது மாநிலத்தின் 9 கோடி மக்களுக்கும், வங்கதேசத்தின் 17 கோடி மக்களுக்கும் ஒரு பெரிய தருணமாக இருக்கும். ஏனெனில், மிகவும் விரும்பப்படும் இந்த மீனின் ஒவ்வொரு கிலோகிராமும் 12.5 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்.
வங்கதேச வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த எஸ்.எச்.எம்.மக்ஃபுருல் ஹசன் அப்பாசி இன்று 37 நிறுவனங்கள் ஹில்சாவை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுள்ளதாகவும், அவை டாக்கா, தலைநகர் பப்னா, பரிசால், ஜெசோர், சிட்டகாங் மற்றும் குல்னா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி இன்று (செப்.18) முதல் அக்டோபர் 5 வரை தொடரலாம். ஒவ்வொரு நிறுவனமும் 30 முதல் 50 மெட்ரிக் டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதன் முதல் தவணை வந்து சேர்ந்துள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 5ஆம் தேதி வரை ஹில்சா மீன்கள் வரும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் நிலவிய அரசியல் குழப்பத்தால், இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.