"இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால்.." - Ex மேஜர் ஜெனரலின் சர்ச்சை கருத்து.. வங்கதேசம் விளக்கம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும், இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரஹ்மானின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஒருகாலத்தில் பங்களாதேஷ் ரைபிள்ஸ் (இப்போது எல்லைக் காவல்படை பங்களாதேஷ் என்று அழைக்கப்படுகிறது) தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லூர் ரஹ்மான், ”இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், வங்காளதேசம் அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் ஆக்கிரமிக்க வேண்டும்" என்றும் “இது தொடர்பாக கூட்டு இராணுவ முடிவு குறித்து வங்காளதேசம் சீனாவுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனவும் தனது முகநூல் பக்கத்தில் வங்காள மொழியில் எழுதியிருந்தார். அவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வங்கதேச அரசு இதற்கு விளக்கமளித்துள்ளது.
“இந்தக் கருத்துகள் வங்கதேச அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அல்லது கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை. எனவே, அரசாங்கம் அத்தகைய சொல்லாட்சியை எந்த வடிவத்திலும் அல்லது முறையிலும் ஆதரிக்கவில்லை" என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லூர் ரஹ்மான், தற்போது 2009ஆம் ஆண்டு பில்கானா படுகொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்கிறார். இதில் பங்களாதேஷ் ரைபிள்ஸ் தலைமையகத்தில் நடந்த கலகத்தின் போது இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.