இந்தியா குறித்து முகமது யூனுஸ் சீனாவில் சர்ச்சை பேச்சு.. கிளம்பிய எதிர்ப்பு!
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இவர், தற்போது சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு, வங்காளதேசம் வழியே ஆழ்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட சீனாவுக்கு அழைப்பு விடும் வகையில் பேசினார். அதில், இந்தியாவைப் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர், “இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்கள் நிலப்பரப்பால் சூழப்பட்டு உள்ளன. இந்திய பெருங்கடலை அடைவதற்கு அவர்களிடம் வழி கிடையாது. நாங்கள் மட்டுமே பெருங்கடலின் ஒரே பாதுகாவலர்” எனத் தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் மற்றும் பொருளாதார நிபுணரான சஞ்சீவ் சன்யால், “இந்தியாவின் உள்நாட்டு புவியியல் அமைப்பைப் பற்றித் தூண்டும் வகையில் பேசுவதற்கான பின்னணி என்ன? வங்காளதேசத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும்போது, 7 இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பு பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் என்ன” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வங்களதேச முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி, ”வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். யூனுஸ் தெரிவித்தவை அதிர்ச்சியளிக்கின்றன. இதுபோன்று பேசுவதற்கு அவருக்கு முற்றிலும் எந்தவித உரிமையும் இல்லை. இதுபோன்று பேசுவதற்கு அவருக்கு முற்றிலும் எந்தவித உரிமையும் இல்லை. வடகிழக்கு இந்தியாவில் இருந்து வங்காள விரிகுடாவுக்கு செல்வதற்கு வங்காளதேச அரசுடன் நெருங்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முறையான ஒப்பந்தங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
”இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களில் சீனா ஈடுபட வேண்டும் என்று யூனுஸ் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறாரா" என அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான கிறிஸ் பிளாக்பர்ன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு நிபுணரான பிரவுல் பக்சி, ”வங்கதேச நாட்டை உருவாக்கியது இந்தியா. ஆனால் அதற்காக எந்தவித பலனையும் நாம் எடுத்து கொள்ளவில்லை. இந்தியாவின் 7 மாநிலங்களுடன் சீனாவை தொடர்புபடுத்தி, சிக்கல்களை உருவாக்கலாம் என யூனுஸ் நினைக்கிறார். அதனை சீனா ஏற்கெனவே செய்து வருகிறது. சீனா மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் வடகிழக்குக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசு முன்பே நடவடிக்கையில் இறங்கிவிட்டது. இந்தியா என்ன செய்யப் போகிறது என்பது யூனுஸுக்கும்கூட நன்றாக தெரியும்” என எச்சரித்துள்ளார்.