’ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றிய இந்திய அதிகாரி?’ - புத்தகத்தில் வெளியான தகவல்!
இந்தியாவிடமிருந்து வந்த ஓர் அவசர தொலைபேசி அழைப்பே வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்தியாவிடமிருந்து வந்த ஓர் அவசர தொலைபேசி அழைப்பே அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
‘இன்ஷா அல்லாஹ் வங்கதேசம்: ஒரு முற்றுப்பெறாத புரட்சியின் கதை’ (Inshallah Bangladesh: The Story of an Unfinished Revolution) என்ற வரவிருக்கும் புத்தகத்தில் இதுகுறித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தீப் ஹால்டர் உள்ளிட்டோர் எழுதியுள்ள இந்த நூலில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது, ஆத்திரமடைந்த கும்பல் டாக்காவில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி விரைந்ததாகவும், நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஷேக் ஹசீனாவுக்கு அவருக்கு நன்கு தெரிந்த ஒரு மூத்த இந்திய அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அந்த உரையாடலுக்குப் பிறகே அவர், வங்கதேசத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வங்கதேச ராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற முதலில் மறுத்ததாகவும், ‘நாட்டைவிட்டு ஓடுவதைவிடச் சாகவே விரும்புகிறேன்’ என அவர் தெரிவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இக்கட்டான தருணத்தில், ஓர் இந்திய அதிகாரி தெளிவாக வற்புறுத்தியதற்குப் பின்னரே ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னரே அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பான புகலிடம் அளித்த இந்திய மக்களுக்கு ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் இந்தியாவுடனான உறவு மோசமடைந்துள்ளதாக ஹசீனா குற்றம்சாட்டினார். யூனுஸ் அரசு சீனா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தனது அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துச் சட்டப்பூர்வமாகப் போராடப் போவதாகவும், தன் மீதான மனிதாபிமான மீறல் குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

