சத்யஜித் ரே-வின் ‘பதேர் பாஞ்சாலி’ குழந்தை நட்சத்திரம் உமா தாஸ்குப்தா உடல்நலக்குறைவால் மறைவு!
சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரமாக நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா காலமானார். 84 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
1955 ஆம் ஆண்டு வெளியான பதேர் பாஞ்சாலி திரைப்படத்தால், அவருக்கு பேரும் புகழும் கிடைத்தபோதும், அதைத்தொடர்ந்து அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல், திரைத்துறையை விட்டு விலகினார். ஒரே படத்தின்மூலம் பிரபலமான உமா தாஸ்குப்தாவின் மறைவு, திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உமா தாஸ்குப்தா கலை வாழ்க்கை..
1955இல் வெளிவந்த பதேர் பாஞ்சாலி- சத்யஜித்ரே எனும் மாபெரும் கலைஞனை உலகறியச் செய்ததோடு, இந்திய திரை உலகை உலுக்கி காட்சி மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உரக்கச் சொன்னது. கறுப்பு வெள்ளையில் மலர்ந்த மிகவும் அழகான திரை மலர் அது.
ஒப்பனையின்றி உணர்வுகளை பிரதிபலித்த அந்த திரைச்சித்திரத்தில் துர்கா எனும் சிறுமி வேடம் ஏற்றிருந்தார் உமா தாஸ்குப்தா. பள்ளி நாடகம் ஒன்றில் உமாவின் சிறப்பான பங்களிப்பை கண்டறிந்த 'ரே' அவரது பெற்றோரிடம் வாதாடி அவரை திரை உலகில் அறிமுகம் செய்தார். எளிய கிராமத்துச் சிறுமி துர்காவாக, சிறுவன் அபுவின் மூத்த சகோதரியாக உமா ஏற்றிருந்த பாத்திரத்தை அவரை விட சிறப்பாக எவராலும் செய்ய முடியாது என அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
குறிப்பாக வயல் வெளியில், வாய்க்கால்களில் நீர் சலசலக்க நடந்து, எங்கோ கேட்கும் விநோதமான ஒலியினால் ஈர்க்கப்பட்டு அது எங்கிருந்து வருகிறது எனக் கண்டறிந்து தம்பியுடன் ஓடி, தடுமாறி விழுந்து எழுந்து சென்று கரும்புகை கிளப்பியபடி வரும் ரயிலைக் காணும் காட்சி அப்படத்தில் உமாவின் பங்களிப்பிற்கு ஒரு சான்று.
திரை பல வாய்ப்புகளை அள்ளித்தந்த போதும், அவர் வணிக ரீதியான திரைப்படங்களை தவிர்த்து கலைப்படைப்புகளுக்கு பங்களிப்பை வழங்கினார். கற்றுத்தருதலில் இனிமை கண்ட அவர் முதுமையில் புற்றுநோயுடன் போராடி மறைந்துள்ளார்.
காலத்தினால் அழியா கலைப் படைப்பின் மூலம் அவர் என்றும் ரசிகர்கள் நினைவில் நிலைத்திருப்பார்.