நீதிபதிகள் பயிற்சி ஒப்பந்தம் | இந்தியாவிற்கு அனுப்புவதை ரத்து செய்த வங்கதேசம்! பின்னணி என்ன?
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.
இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இவ்வரசு அந்நாட்டு ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தவிர, சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை ஒப்படைக்க இந்திய அரசிடம் வங்கதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுகுறித்து இந்திய அரசு எதுவும் கூறவில்லை.
மேலும் அவரது ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களிலும் கைவைத்து வருகிறது. இந்த நிலையில், 2017இல் வங்கதேசத்தின் அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்திருந்தபோது இருநாடுகளுக்கும் இடையே 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் ஓர் ஒப்பந்தத்தின்படி வங்கதேசத்தைச் சேர்ந்த துணை நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், உள்ளிட்ட நீதிபதிகளுக்கு மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய நீதியியல் மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, நீதிபதிகளை மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் பிப்ரவரி 10-20 தேதிகளில் நடைபெறும் பயிற்சிக்கு அனுப்ப கடந்த டிசம்பர் 30 அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை வங்கதேச அரசு ரத்து செய்துள்ளது. இது, ஹசீனா அரசு இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதற்கான சமிக்ஞையாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, மற்றொரு விவாதமும் வங்கதேசத்தில் இடையே நடைபெற்று வருகிறது. அதாவது, இந்தியாவை பல வகையிலும் வங்கதேசம் சார்ந்து இருக்கும் நிலை இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கர் உஸ் ஜமான் சுட்டிக்காட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.