வங்கதேசம் | ’தேசத்தந்தை’ ஷேக் முஜிபுர் ரகுமான் என்ற வரிகள் நீக்கம்.. பள்ளி புத்தகங்களில் மாற்றம்!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இவ்வரசு அந்நாட்டு ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வங்கதேச நாடு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர், முஜிபுர் ரஹ்மான். இவர், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் ஆவார். நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்படும் இவரது சிலை, மாணவர்கள் போராட்டத்தின்போது சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டின் கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரஹ்மான் நோட்டுகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.
தற்போது அவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை எரிக்கும் போராட்டத்தையும் மாணவர்கள் முன்னெடுத்திருப்பது உலக அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில், வங்கதேச பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள நாட்டின் வரலாற்றில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1971இல் நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தது ஷேக் முஜிபுர் ரகுமான் என இதற்குமுன் இருந்த நிலையில், தற்போது அது ஜியா உர் ரகுமான் என மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ’ஷேக் முஜிபுர் ரகுமானை தேசத்தந்தை’ எனக் குறிப்பிட்ட வரிகளும் நீக்கப்பட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தைதான் ஷேக் முஜிபுர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் ஷேக் ஹசீனாவிற்கு எதிர்த்தரப்பில் உள்ளவரும் தற்போது இடைக்கால அரசுக்கு நெருக்கமாக உள்ளவருமான முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் தந்தை ஜியா உர் ரகுமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல் வாரியத்தின் (NCTB) தலைவர் பேராசிரியர் AKM Reazul Hassan, “அந்தக் கருத்து வரலாற்றில் திணிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இத்தகைய பாடப் புத்தகங்களே வழங்கப்பட உள்ளன.
முன்பு, பாடப்புத்தகங்களைத் திருத்தியவர்கள், ஷேக் முஜிபுர் ரஹ்மான் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டபோது வயர்லெஸ் செய்தியை (சுதந்திரம் அறிவித்து) அனுப்பியது உண்மை அடிப்படையிலான தகவல் அல்ல என்பதைக் கண்டறிந்தனர். எனவே அவர்கள் அதை அகற்ற முடிவு செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பாடப்புத்தகங்களில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. உண்மையில், வரலாறு பெரும்பாலும் பாடப்புத்தகங்களில் மீண்டும் எழுதப்பட்டுள்ளது. ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள், அவர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று கூறுகின்றனர்.
இருப்பினும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) நிறுவனரும், தற்போதைய BNP தலைவரான கலீதா ஜியாவின் கணவருமான ஜியாவுர் ரஹ்மானைப் பின்பற்றுபவர்கள், தங்கள் தலைவர்தான் இதைச் செய்ததாக நம்புகின்றனர்.
1971இல் சுதந்திரப் பிரகடனத்தை உண்மையில் யார் சொன்னதென்பது குறித்து இருதரப்பும் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், வரலாற்றுரீதியாக, மார்ச் 27, 1971 அன்று பிரகடனத்தை செய்தவர் ஜியாவுர் அல்ல, முஜிபுர் ரஹ்மான் என்பதற்கே ஏராளமான சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வங்கதேசத்தின் அரசியலமைப்பு, மார்ச் 26, 1971 அன்று டாக்காவில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சுதந்திரப் பிரகடனத்தை செய்தார் எனக் கூறுகிறது.