7,000 தாக்குதல்கள்.. 1,700 ஏவுகணைகள்.. ஈரானை அதிரவைத்த பஹ்ரைன்!
செய்தியாளர் - M. மீரா
பாரசீக வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பஹ்ரைன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வில் பேசிய பஹ்ரைன் பிரதிநிதி, சர்வதேச அமைப்புகள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். வெறும் அறிக்கைகள் மற்றும் அழைப்புகள் மூலம் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது என்றும், சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. தீர்மானங்களையும் நடைமுறையில் அமல்படுத்துவதன் மூலமே மக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் மற்றும் ஜோர்டான் மீது ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் 7,000 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 1,700 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 80 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 5,220 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக பஹ்ரைன் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்ததாகவும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கும் ஐ.நா. சாசனத்திற்கும் எதிரானவை என்றும் பஹ்ரைன் குற்றம்சாட்டியது.
அதேபோல், ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பு சவூதி அரேபியாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடங்கள் மற்றும் புனித தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் பஹ்ரைன் குற்றம்சாட்டியது. செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் பஹ்ரைன் கண்டித்தது.
பஹ்ரைன் வெளியிட்ட மற்றொரு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தில், 2,000 சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களில் இருந்த சுமார் 20,000 மாலுமிகளை ஈரான் தடுத்து வைத்ததாக கூறப்பட்டது. மேலும், 72 வர்த்தகக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டதில் 22 மாலுமிகள் உயிரிழந்ததாகவும் பஹ்ரைன் தெரிவித்தது.
இவை வெறும் எண்கள் அல்ல என்று குறிப்பிட்ட பஹ்ரைன் பிரதிநிதி, ஒவ்வோர் எண்ணுக்குப் பின்னாலும் ஒரு கப்பல், ஒரு துறைமுகம், ஒரு சந்தை மற்றும் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் குடும்பங்கள் இருப்பதாகக் கூறினார்.
பஹ்ரைனின் உரையில் முக்கியமாக இடம்பெற்ற மற்றொரு விவகாரம் ஹார்முஸ் நீரிணை. இந்த சர்வதேச கடல்வழியில் வர்த்தகக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டதாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் கடல் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டதாகவும் பஹ்ரைன் குற்றம்சாட்டியது. மேலும், கப்பல்கள் செல்ல ஒருதலைப்பட்சமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறியது.
சர்வதேச சட்டத்தின்கீழ் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் சர்வதேச நீரிணைகளில் போக்குவரத்து உரிமை இருப்பதாக பஹ்ரைன் வலியுறுத்தியது. எனவே, எந்த ஒரு நாடும் கப்பல்கள் செல்ல அனுமதி அல்லது கட்டணம் என்ற பெயரில் புதிய நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தது.
சர்வதேச நீர்வழிகளைப் பொருளாதார அழுத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்துவதையும் பஹ்ரைன் நிராகரித்தது. ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றுப் பாதைகள் இருப்பதாகக் கூறி தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பஹ்ரைன் தெரிவித்தது. சர்வதேச கடல்வழிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்பு, வளைகுடா நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி ஆகியவற்றையும் பாதிக்கும் என பஹ்ரைன் எச்சரித்தது. இறுதியாக, ஐ.நா.அமைப்புக்கு புதிய தீர்மானங்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் திறனும் அவசியம் என்று பஹ்ரைன் தெரிவித்தது.

