காவல் நிலையமான ஹிட்லரின் வீடு.. ஆஸ்திரியா அரசு உத்தரவு!! காரணம் என்ன?
ஆஸ்திரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரௌனாவ் ஆம் இன் (Braunau am Inn) நகரில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ம் ஹிட்லர் பிறந்தார். சில வாரங்களுக்குப் பிறகு அவரது குடும்பம் அங்கிருந்து குடிபெயர்ந்தது. எனினும் அவர் பிறந்த வீடு பல ஆண்டுகளாக புதிய நாஜி ஆதரவாளர்கள் வந்து செல்லும் அடையாள இடமாக மாறியிருந்தது. தொடர்ந்து, இந்த இடம் ஹிட்லரின் புனித தலமாக மாற்றுவதை தடுக்கும் நோக்கில், தனியாரிடம் இருந்து 2017ஆம் ஆண்டு அரசு அந்த கட்டிடத்தை கட்டாயமாக கையகப்படுத்தியது.
இருப்பினும், பல ஆண்டுகளாக அந்த வீட்டை என்ன செய்ய வேண்டும் என்ற விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அதை அருங்காட்சியகமாக மாற்றலாமா? இடித்துவிடலாமா? அல்லது வேறு பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாமா? என்ற பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில், ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பிரதிபலிக்கும் காவல் நிலையமாக மாற்றுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, 2019-ல் கிட்டத்தட்ட 20 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 220.12 கோடி ரூபாய்) செலவில் இந்தக் கட்டத்தின் மறுசீரமைப்பு பணிகளை ஆஸ்திரியா அரசு தொடங்கியது.
இந்தசூழலில் தான், தற்போது ஹிட்லர் பிறந்த வீடு அதிகாரப்பூர்வமாக காவல் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இருந்த ஹிட்லருடன் தொடர்புடைய அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், நாசிசத்தின் பலியானவர்களை நினைவுகூரும் நினைவுக் கல் மட்டும் அங்கேயே பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கார்னர், "இந்த கட்டிடம் இனி சர்வாதிகாரத்தின் சின்னம் அல்ல. இது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இடம்" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, உலக வரலாற்றின் இருண்ட அத்தியாயத்துடன் இணைந்திருந்த ஒரு கட்டிடம், இன்று ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பிரதிபலிக்கும் புதிய அடையாளத்தை பெற்றுள்ளது.

