ஆஸ்திரேலியா |பாலியல் வன்புணர்வில் சிக்கிய இந்தியர்.. பாஜகவுடன் தொடர்பு.. காங். குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர், பாலேஷ் தன்கர். போலியான வேலைவாய்ப்பு விளம்பரம் அளித்து, வேலை தேடி வந்த பெண்களை வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து அளித்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. 2006ஆம் ஆண்டு படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பின்னர் அங்கு குடியேறிய தன்கர், 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை புகாரை தொடர்ந்து வழக்கு விசாரணை டவுனிங் செண்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2018 முதல் 2023 ஆண்டு வரை, 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட 39 குற்ற வழக்குகளில் தன்கர் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அவருக்கு 30 ஆண்டுகள் பரோல் அளிக்கப்பட மாட்டாது. அவரது பரோல் இல்லாத காலம் ஏப்ரல் 2053இல் முடிவடைகிறது. அவருக்கு 83 வயதாகும்போது அவரது 40 ஆண்டு சிறைத்தண்டனை முழுமையாக முடிவடையும்.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி பாஜகவை குறிவைத்து, ஆளும் கட்சியுடன் தன்கரின் உறவுகளைக் குற்றம்சாட்டியது. ஆஸ்திரேலியாவில் உள்ள 'பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள்' என்ற அமைப்பில் தங்கர் தொடர்புடையவர் என்றும், அவர் தனது பதவியைப் பயன்படுத்தி இந்தக் குற்றங்களைச் செய்ததாகவும் காங்கிரஸ் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டியது. "மகளிர் தினத்தன்று வெளியான இந்தச் செய்தி, பாஜக தலைவர்களிடமிருந்து மகள்களைப் பாதுகாக்க நினைவூட்டுவது ஆகும்" என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
குற்றங்களின் தீவிரத்தை பிரதிபலிக்கவும், மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும், இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2018ஆம் ஆண்டு கைது செய்யப்படும்வரை, தன்கர் இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தில் நன்கு மதிக்கப்பட்டார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்கைக்கோள் குழுவை நிறுவி, ஆஸ்திரேலிய இந்து கவுன்சிலின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.