அயோத்தி | பட்டியலினப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை.. எம்.பி. கண்ணீர்!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பட்டியலினப் பெண் ஒருவர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்படி கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு பகவத் கதா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற அந்தப் பெண், அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு குடும்பத்தினர் சேர்ந்து தேடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன், கால்கள் கட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் அப்பெண்ணின் சடலம் கால்வாயில் வீசப்பட்டுள்ளது. இது, அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், இந்த விஷயத்தில் நீதி கிடைக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரி அசுதோஷ் திவாரி, “குற்றவாளிகளைப் பிடிக்க தடயவியல் குழு மற்றும் கண்காணிப்பு குழு உட்பட பல குழுக்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளோம். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், “பட்டியலினப் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன்” என்று பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும், “என்னை டெல்லிக்குச் செல்லவிடுங்கள். இந்த விவகாரத்தை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி முன்பு எழுப்புவேன். எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் என்னுடைய மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன். நாம் நம் மகள்களை காப்பாற்ற தவறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின்போது அவதேஷ் கண்ணீர்விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.