மியான்மர் | ”மீண்டும் நிலநடுக்கம் வரும்” - மக்களிடம் பீதியைக் கிளப்பிய 21 வயது ஜோதிடர் கைது!
50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கடந்த மார்ச் 28ஆம் தேதி நண்பகல் 12.50 மணியளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 3,500 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மியான்மரைச் சேர்ந்த 21 வயது ஜோதிடரான ஜான் மோ தி, அடுத்த அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ”ஏப்ரல் 21 அன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட இருக்கிறது. இது, மியான்மரில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் தாக்கும். நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் சரிந்து விழும். ஆகையால், முக்கியமான பொருட்களை மக்கள் எடுத்துச் செல்லவும். மேலும் நிலநடுக்கத்தின்போது கட்டடங்களை விட்டு தூர செல்ல வேண்டும். பகலில் பொதுமக்கள் உயரமான கட்டடங்களில் தங்கக்கூடாது” என அதில் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ, 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக 21 வயது ஜோதிடரான ஜான் மோ தி அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே, அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவை நம்பி, பலர் வெளியிடங்களில் போய் தஞ்சமடைந்துள்ளனர். எனினும், இதுபோன்ற பேரழிவுகளில் உள்ள சிக்கலான காரணிகளைக் கருத்தில் கொண்டு, பூகம்பங்களை கணிக்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஜான் மோ தி சில சர்ச்சைக்குரிய கணிப்புகளை வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில், எதிர்காலத்தில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை நடத்தும் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் விடுதலை சாத்தியம் ஆகும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.