மியான்மர் நிலநடுக்கம் | ”300 அணுகுண்டுகளின் தாக்கம்” - அமெரிக்க புவியியலாளர்!
50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கடந்த மார்ச் 28ஆம் தேதி நண்பகல் 12.50 மணியளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. மேலும், வானுயர்ந்த கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகும் வீடியோவும், மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், நிலநடுக்கத்தின்போது குலுங்கி வெளியே கொட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 1,700 பேர் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நெருங்கி வரும் பருவமழை காரணமாக மியான்மரில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தேவைகள் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருவதாக உலகின் மிகப்பெரிய மனிதாபிமான வலையமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து முன்னணி அமெரிக்க புவியியலாளரான ஜெஸ் பீனிக்ஸ், ”மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், 300க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை ஒன்றாகக் கட்டவிழ்த்துவிட்டதற்குச் சமமான ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பின்அதிர்வுகள் மாதக்கணக்கில் நீடிக்கக்கூடும். இந்திய டெக்டோனிக் தட்டு மியான்மருக்கு அடியில் உள்ள யூரேசிய தட்டுடன் தொடர்ந்து மோதி வருவதால் இது நிகழும். மியான்மரில் ஏற்பட்டுள்ள பேரழிவு நாட்டின் உள்நாட்டுப் போரினால் மோசமடையும் என்பதால், அதன் பாதிப்பின் முழு அளவையும் புரிந்துகொள்வதில் தடைகள் இருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நிலநடுக்கத்திற்குப் பிறகும் அவ்வப்போது சண்டைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளர்ச்சிக் குழு ஒன்று, நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பு, சுமார் 3.5 மில்லியன் மக்கள் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.