ஈரானிடம் அணுகுண்டை விட மோசமான ஆயுதங்கள்.. கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் பரபரப்பு தகவல்!
ஈரான் அணுகுண்டை விட பல மடங்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை உருவாக்கும் திறனை பெற்றுள்ளதாக கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் தெரிவித்த தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், ஈரானின் அறிவியல் முன்னேற்றம் மற்றும் எதிர்கால ஆயுதங்களின் ஆபத்து குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
செய்தியாளர் - M.மீரா
அணுகுண்டை விட பல மடங்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை உருவாக்கும் அளவுக்கு ஈரான் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதாக, கொல்லப்பட்ட ஈரான் அணு விஞ்ஞானியின் மகன் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானின் முன்னாள் அணு விஞ்ஞானியும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியுமான மொஹ்சென் ஃபக்ரிசாதேவின் மகன் ஹமீத் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நவம்பர் 15ஆம் தேதி தெஹ்ரானில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனது தந்தையின் அறிவியல் திறன்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, எதிர்காலப் போர்கள் அனைத்தும் அணு ஆயுதங்களை மட்டுமே நம்பி நடைபெறாது என்று தனது தந்தை நம்பியதாகக் குறிப்பிட்டார். அணுகுண்டை விடவும் அதிகமான தடுப்பு சக்தியை வழங்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பங்களை ஈரான் உருவாக்கும் திறனைப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஈரானுக்காகப் பணியாற்றி உயிரிழந்த பலரும் உயிரியல் தொழில்நுட்பம், லேசர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்ததாகக் கூறினார். இருப்பினும், அணுகுண்டை விட ஆபத்தான ஆயுதம் என்று அவர் குறிப்பிட்டது எந்த வகையான ஆயுதம் என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, உயிரியல் ஆயுதங்கள் ஈரானிடம் இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தவில்லை.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான அச்சம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அணு ஆயுதங்களைத் தாண்டிய அறிவியல் திறன்களை ஈரான் கொண்டிருக்கிறது என்ற கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.
2020-ல் அணு விஞ்ஞானி ஏன் கொல்லப்பட்டார்?
மொஹ்சென் ஃபக்ரிசாதே கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள், ஃபக்ரிசாதேவை ஈரானின் இரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் (Project Amad) முக்கிய மூளையாகவும், "ஈரானிய அணு வெடிகுண்டின் தந்தை" என்றும் கருதின. அவர் உயிருடன் இருந்தால் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் இலக்கை விரைவாக எட்டிவிடும் என இஸ்ரேல் அஞ்சியது.
2020 இல் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சமயத்தில், ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதைத் தடுத்து, பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதும் இதன் கொலையின் பின்னணியாக இருந்தது. பைடன் பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு இக்கொலை நடத்தப்பட்டது. ஈரானின் மிக முக்கியமான விஞ்ஞானி கொல்லப்பட்டால், ஈரான் ஆத்திரமடைந்து அமெரிக்கா அல்லது அதன் கூட்டாளிகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தும் என்று கணிக்கப்பட்டது. அப்படி ஈரான் தாக்கினால், பைடன் நிர்வாகம் ஈரானுடன் மீண்டும் எந்தவொரு அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையையும் தொடங்க முடியாத ஒரு அரசியல் சூழல் உருவாகும் என்பதே இக்கொலையின் முக்கிய உத்தியாக கூறப்பட்டது. .
மேலும் இக்கொலை செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்பட்ட அதிநவீன ரிமோட்-கண்ட்ரோல் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியது. இக்கொலையின் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு இருந்ததாகப் பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.

